பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி!! கர்நாடகா அரசு முடிவு

பெங்களூரு:

1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி ஆகியவற்றில் இலவச அளிக்கப்படும். தொழில்முறை கல்வி சார்ந்தவை தவிர்த்து அனைத்து பட்டப்படிப்புகளும் அடுத்த கல்வியாண்டு முதல் இலவசமாக அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான வருவாய் ஈட்டும் குடும்பத்தை சேர்ந்த 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ. 110 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களை போல் ஆண்டுக்கு ரூ.611 ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். தெலங்கானாவில் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது, பஞ்சாப்பில் பிஹெச்டி வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

கர்நாடகா உயர்கல்வி துறை அமைச்சர் பாசவராஜ் ராயரெட்டி கூறுகையில், ‘‘ மற்ற மாநிலங்களில் உள்ளவற்றை அப்படியே காப்பி அடித்து அமல்படுத்துவது கிடையாது. அதை முன் மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்படும். இதன் மூலம் பெண்கள் அதிகாரத்துவம் மிகுந்தவர்களாக மாற்றப்படுவார்கள். இதில் பெண்களுக்கு 1ம் வகுப்பு முதல் பட்டப்டிப்பு வரை தேர்வு கட்டணம் தவிர்த்து அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும்.

முதலில் மாணவிகள் தங்களது கல்வி கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். பின்னர் இதை அரசு திரும்ப வழங்கும். ஒட்டுமொத்த டியூஷன் கல்வி கட்டணமும் ரத்து செய்யப்படும். மவுன் கார்மெல் போன்று பிரபல கல்லூரியை மாணவிகள் தேர்வு செய்தாலும் இந்த கட்டண ரத்து பொருந்தும்’’ என்றார்.

10ம் வகுப்புக்கு பின் கல்வி தொடர்வதை நிறுத்தும் ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில் அரசில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் நகரம் மற்றும் கிராமம் என்றும், ஏழை பணக்காரம் என்றும் வேறுபடுத்தி பார்க்கும் திட்டம் அரசு வசம் இல்லை.

அனைத்து பெண்களுக்கும் கல்வி கட்டணமும் திரும்ப வழங்கப்படும். ஏற்கனவே 8ம் வகுப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.