புதிய பகுதி: ஊடக குரல்
பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி.   அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது.
ஊடகத்துறை மேல் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்,   இந்தத் துறையில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள், இன்றைய ஊடக நிலை போன்ற பல கேள்விகளுக்கு பதில் பெறுவதே நமது நோக்கம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் (சீனியர் எடிட்டர்)  வேங்கடபிரகாஷ்  நமது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர்.  ஆழமான கேள்விகளை வீசி, பதில்களை பெறுபவர்.  பலரது கருத்துக்களும் வெளிப்படும் வகையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்.
தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினமும் இரவு ஏழு முதல் ஒன்பது மணி வரை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் “இன்றைய தினம்” நிகழ்க்கிசியின் நெறியாளர்.   வேலை பளுவிற்கு இடையே நமக்கு விரிவான பதில்களை அளித்தார் வேங்கடபிரகாஷ்.
அவரது பேட்டி…   
 
1
 
ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
கற்றது பொறியியலை… காதலித்தது தமிழை!  தந்தை தமிழாசிரியர்.   இரத்தம் வென்றது  கற்றதை மறந்தேன். கலைத்துறையில் நாட்டம் மிகுந்தது.  மேடைப் பேச்சு  கைவந்தது. உள்ளூர்த் தொலைக்காட்சியில் உரசிப்பார்த்துக்கொண்டேன்.
பின் ஏதோ தெளிந்தவனைப்போல் மேலாண்மைக்கல்வி கற்கப்புகுந்தேன். ஒருமாதந்தான். “செய்தித் தொலைக்காட்சி ஒன்றில்  அழைக்கிறார்கள்… ஒத்துவருமாவென்று பாருங்கள்” என்றார் மதுரை காமராசர் பல்கலை நூலகத்துறைத் தலைவராக அப்போதிருந்த முனைவர் ஸ்ரீமுருகன்.
கல்லூரியிலிருந்து விடைபெற்றேன். பின்னும் ஏனோ தாமதமாயிற்று. அத்தாமதத்தில்தான் நிலைகுலைந்துபோனேன். சத்தமில்லாமல் நான்கு சுவர்களுக்குள் தவங்கிடந்தேன். தந்தையார் நூலகத்திலிருந்து ஏராளமான உத்தமர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைக் கொண்டுவந்து தந்தார். இரவுக்கும் பகலுக்கும் சூரிய சந்திரர்கள் பொறுப்பல்ல. என் கண்களே பொறுப்பென்றிருந்தேன். விழித்திருந்தால் பகல்… செருகியிருந்தால் இரவு. வரவேற்பறையிலிருந்த தொலைக்காட்சியை என்னறைக்குள் இழுத்துவந்தேன். பொதிகைச் செய்திகளையும், சன் செய்திகளையும் பார்த்துப்பார்த்து காட்சி நுணுக்கங்களையும் நேரக் கணக்கீடுகளையும் அங்க அசைவுகளையும் குறிப்பெடுத்தேன். ஒருகட்டத்தில் அழைப்புக்கேங்கித் துருப்பிடித்துக் கிடப்பதைவிடத் தலைநகருக்கே சென்று போராடலாமென்று வாரிச்சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். 
  இதுவரையிலான உங்கள் ஊடக பயணம்..?
ஒட்டுப்போட்ட காற்சட்டைப் பருவத்திலிருந்து ஓட்டுப்போடும் வயதுவரை ஒன்றாகவே வளர்ந்த  நண்பனுடன் ஒரே வீட்டில் சென்னை வாழ்க்கை தொடங்கியது.  அப்போது  தொடங்கப்படவிருந்த தமிழ்த்திரை முதல் கோலோச்சிக்கொண்டிருந்த  சன்,  வின் என அனைத்திலும் விண்ணப்பித்துவந்தேன்.  வின்னில்  செய்திவாசிக்க வருகிறேன் என்றவனை உள்ளூர்த் தொலைக்காட்சி நேர்காணல் அனுபவத்தை வைத்து நேர்காணல் செய்யவைத்துவிட்டார்கள்.
காலம் எனக்காக வழங்கிய அருட்கொடை அண்ணன் பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் வழிகாட்டுதலால் பொதிகையில் செய்திவாசிப்பாளனாக விண்ணப்பித்தேன். என்னுடையதுதான்  இறுதி விண்ணப்பம்.
அங்கு நேர்காணலுக்குச் செல்ல ’வின்’னிலிருப்போர் விரும்பவில்லை. ’வின்’னில் மட்டுமிருந்தால் விண்ணெட்டுவது சாத்தியமல்லவென்பது புரிந்தது. தேங்கி ஏங்கியிருந்த காலமெல்லாம் கடக்கட்டுமென்றெண்ணிப் பொதிகைக்குச் சென்றேன்.
நேர்காணலுக்காகக் காத்திருந்தேன். ஓர் அழகுப்பெண் நடந்து சென்றதைப் பின்னிருந்து பார்த்தேன். அவர் திரும்பிவந்தபோது அதிர்ந்து  போனேன்.
தமிழகத்தில் தொலைக்காட்சிச் செய்திவடிவம் சிசுவாக இருந்த காலந்தொட்டு தரமான தமிழோடு சிகரந்தொட்ட, எந்நாளும் நான் மதிக்கின்ற எமதருமை முன்னோடி ஷோபனா ரவி அவர்கள்.
அட! ஊடகத்தினர் உடலை எப்படிப் பராமரித்துக்கொள்ளவேண்டும் என்பதற்கும் இலக்கணம் இவர்தானோ என்றிருந்தது!.
அங்கோராண்டு! அங்கிருந்து குமுதம் இணையத்தளத்திற்குப் பொறுப்பாளனானேன். இன்னொரு கனவு நாயகர் ரபிபெர்னார்டின் வழிகாட்டுதலில் பணியாற்றும் வாய்ப்பு.  
இதற்குப் பொதிகை சம்மதிக்கவில்லை. பொதிகையைக் கனத்த இதயத்தோடு தாண்டிப் பயணித்தேன். குமுதத்தில் ஓராண்டு!  ரபி சாரும் நானும் அடுத்தடுத்து வெளியேற வேண்டிய நிலை. மகிழ்ச்சியோடு வெளியேறினேன். ஜீ தமிழில் செய்திவாசிப்பாளனாகவும் மாநகரத்தந்தையோடு மக்கள் குறைதீர்க்கும் தொடர் நிகழ்ச்சியொன்றைச் செய்பவனாகவும், நிகழ்ச்சிகளுக்குத் திரைக்கதை எழுதுவோனாகவும், குரல் கொடுப்போனாகவும் என்று பல்வேறு வேலைகளைச் செய்தேன்.  
கவலைதான் மனிதனைக் கொல்லுமேயல்லாமல் வேலை கொன்றுவிடாதென்பதால் சளைக்காமல் செய்தேன். சொந்தமாகச் சில தொழில்கள் செய்தேன். ஊடகம் சார்ந்த ஒன்றென்றால் மீடியா4யூ என்ற தயாரிப்பு நிறுவனமும் அதில் அடங்கும்.  டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரஃபி  உள்ளிட்ட உலகத்தொலைக்காட்சிகள் பலவும் தமிழ் பேசத் தொடங்கியதும் அதில் பங்கேற்கும் நல்வாய்ப்பும் கிடைத்தது.
தற்போது வரையிலான எனது குறுகிய ஊடக வாழ்வில் உள்ளூர்த் தொலைக்காட்சியான தாமரை முதல் பொதிகை வரை ஒரு கட்டமென்பேன். குமுதம் முதல் ஜீதமிழ் வரை அடுத்த கட்டமென்பேன். புதியதலைமுறையை அடுத்த கட்டமென்பேன்.
கரைகள் பலமாய் இருக்கும்வரை ஏரியாயிருப்பேன்… பலமிழந்தால் விடைபெற்று நதியாயிருப்பேன்… எங்கும் நன்னீராய் மட்டுமே நானிருப்பேன்.
ஒரு ஊடகக்காரரின் அடிப்படை தகுதி என எதை நினைக்கிறீர்கள்?
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டுமென்றால் என்ன பதிலோ அதே பதில்தான் ஓர் ஊடககக்காரனின் தகுதிக்கும். நேர்மை துணிவு தெளிவு எளிமை எனச் சொல்லலாம். கேட்பதற்கு எளிதாயிருக்கலாம். செயல்படுத்திப்பார்த்தால் சிரமம் தெரியும்.
நேர்மையாயிருக்கச் சூழல் விடுவதில்லை. சூழலை எதிர்க்கும் துணிவென்பது பிறர்க்காக என்றால் அவ்வளவு எளிதில் வருவதில்லை. பொய்யும் புரட்டும் நிறைந்த உலகில் தெளிவுபெற நல்லாசிரியர் வேண்டும். எளிமை என்பது நுகர்வுத்தீவிரவாத உலகில் எள்ளி நகையாடப்படுவதாகிறது. இவற்றையெல்லாம் செயல்படுத்துவோனாக ஒரு ஊடகக்காரன் இருக்கவேண்டும்.
அப்படி இருந்தால் இங்கிலாந்தில் இருப்பதைப்போல ஒரு காவலரிடம் காட்டும் மரியாதையைவிட ஒரு செய்தியாளனிடம் அதிக மரியாதையைக் காட்டுவார்கள். தங்களுக்கானவானாகத் தலைமேல் வைத்துக்கொள்வார்கள்.
மாறாகக் கையூட்டுப் பெறுவதென்றால் அது ஒரு திருடனுக்குரிய தகுதியாகிவிடும். ஆக எப்போதும் ஒரு நல்ல வழிகாட்டியின் துணையோடு நல்ல மனிதனாக இருப்பதே அடிப்படைத் தகுதி.
3
ஒருவர்  ஆபத்தில் இருக்கும் நேரத்தில் காப்பாற்றாமல் படம் எடுக்கிறார்கள் என்று ஊடகத்தினர் மீது குற்றச்சாட்டு உண்டு.  உங்கள் பார்வை என்ன?
ஐயமென்ன? அப்படிச் செய்தால் அங்கு முதல் குற்றவாளி அவன் தான். இதில் மாற்றுக்கருத்தேது?
என் பதின்ம வயதில் ஒரு தொலைக்காட்சியில் கண்டது நினைவிருக்கிறது. கேரளத்தில் ஒரு குளத்திற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மற்றொருவரைப் போட்டு அமிழ்த்துக்கொண்டிருந்தார். அவர் செத்து மிதக்கும்வரை செய்தியாளர் படமெடுத்துக்கொண்டேயிருந்தார்.
ஆக அங்கே ஓர் உயிரைக் கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் சேர்ந்து! அதை நாம் காணும்படி நேர்ந்தது குற்றவாளி தடயத்தை விட்டுச் செல்வதைப் போலத்தானே?! சக உயிரைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும். பிறகு இப்படி நடந்தது என்று திரையில் தோன்றிச் சொல்லிக்கொள்வதுதானே!
அதனால்தான் மீண்டும் மீண்டும் மனிதப் பண்புகளையே நான் வலியுறுத்துகிறேன். சிறந்த மனிதர்களுக்கு அதற்கு மேலாகத் தெரிந்துகொள்ளவேண்டிய ஊடகப்பண்புகள் என்பவை வெகு சிலவே.
உங்கள் நிகழ்ச்சி எந்தவித சார்பும் இன்றி இருக்கிறது என்ற அபிப்பிராயம் உண்டு. தனிப்பட்ட முறையிலும் அது போல இருக்க வாய்ப்பில்லை. சார்புத்தன்மையை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து ஊடகத்தில் செயல்படுவது அனைவருக்கும் சாத்தியமா?
என்னைக் குறித்த பார்வைக்கு நன்றி.
உள்ளத்து அன்பு ஊடக நேர்மைக்குக் குறுக்காக வர அனுமதிக்காமல் இருப்பது மிகக்கடினம்தான். ஆனால் அதை வெற்றிகரமாகச் செய்துவருகிறேன் என்று நம்புகிறேன். நேர்மை என்பதை ஒருவழிப்பாதையாகக் கருதிக்கொள்வது ஒரு உத்தி. வீட்டிலிருந்தே பழகிக்கொள்ளவேண்டியதுதானே? குடும்பத்தினர் தவறு செய்தால் நேருக்கு நேர் கேட்டுவிடுகிறோமே அதைவிடப் பிறர் உறவென்ன வெல்லமா?
எத்தகைய தலைவராயிருந்தாலும் நேர்மையெனும் துலாக்கோலில் போட்டு நிறுத்துவிடவேண்டியதுதான். பழகினால் கைவரும்.
தொலைக்காட்சி விவாதங்களில் சில சமயம்,  வார்த்தைகள்  தடித்து தனிப்பட்ட தாக்குதல் நடந்துவிடுகிறேதே..  இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மிகவும் வருந்துகிறேன். உணர்வும் அறிவும் கலந்த மனிதப்பிறவி நாம். தொலைக்காட்சி வாதத்தை நீதிமன்ற வாதத்தைவிட ஒரு படி மேலான மக்கள் மன்ற வாதமாகவே நான் எப்போதும் நினைக்கிறேன்.
நீதிமன்றத்தில்கூட பெரும்பாலும் தட்டையாகச் சட்டங்களின் அடிப்படையில்தான் வாதங்கள் நடைபெறுகின்றன. பிற்பாடு நீதிமான்களே தவறிழைத்துவிட்டதாக வெளிப்படையாகவே வருந்துகின்றனர். ஆனால் இங்கோ மக்கள் மன்றத்தில் உணர்வுக்கும் அறிவுக்கும் மதிப்பளித்து வாதிடுகிறோம்.
சிக்கலென்னவென்றால் உணர்வு மேலோங்கும்போது வார்த்தைகள் வரம்பு கடக்கும் வாய்ப்புண்டு. கட்டுக்குள் வைத்துக்கொள்ளத்தக்கவர்கள் என்றெண்ணித்தான் அழைக்கிறோம். சில நேரங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. ஆனமட்டும் தடுத்துப்பார்க்கிறோம். அதையும் மீறுவோர் அம்பலப்பட்டு நிற்பார்கள்.
மொத்தத்தில் இன்னார் நிகழ்ச்சியில் நாம் அமைதியாகப் பேசிவரலாம் என்ற தன்மையை நிலைநிறுத்துவது நெறியாளரின் கடமை. இயலவில்லையெனில் அவர் பெயரைப் பார்வையாளர் என்றோ எரியவிடுவோர் என்றோ வைத்துக்கொள்வதுதான். மேலும் உடனடியாக நிலையைச் சரி செய்யாவிட்டால் வந்த விருந்தினர்கள் வாழ்நாளெல்லாம் வருந்தும்படி நேர நெறியாளர் தானும் காரணமாகிறார். அவரது அரசியல் வாழ்வைக் கெடுத்ததாகவும் அமையும். திருத்தலாமே தவிர யாரையும் கெடுத்தலாகாது.

உங்கள் நிகழ்ச்சியில் இதுபோல நடந்தால் எப்படி மடைமாற்றுவீர்கள்..?
வெகு அரிதாக… ’’ உங்கள் வயதுக்கும் அறிவுக்கும் நான் சொல்லிப் புரியவைக்கவேண்டியதில்லை அய்யா… கோடிப்பேர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ‘’ என்று மட்டும் சொல்லத் தொடங்குவேன். அதிலேயே அமைதியாகிவிடுவர். நான் துடைக்கத்தான் விரும்புகிறேன் வழியும் இரத்தத்தைச் சுவைக்க அல்ல என்பதை உடனடியாக அவர்களும் புரிந்துகொள்கிறார்கள். எல்லைகள் காக்கப்படுகின்றன.
2
 
விவாதத்தில் பங்குபெறுபவர்கள்  தரமின்றி பேசினால் அதை தடுக்காமலும், அல்லது தூண்டிவிடும் நிகழ்ச்சி நெறியாளர்களும் உண்டு. அவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
நெறிப்படுத்த வேண்டிய நெறியாளர்கள்! அங்கே நிர்வாகத்தின் தவறும் இணைவதாகச் சந்தேகிக்கலாம். அவர்களைப் புதியதலைமுறையைப் பின்பற்ற வருமாறு அன்போடு அழைக்கிறேன்.
நெறியாளர்களுக்கு அறிவுரை சொல்லும் வயதில்லை எனக்கு. நான் செல்லும் பாதையைச் சொல்கிறேன். சரியென்றால் ஏற்கலாம்.
பொதுவாகவே காரசாரமாக நிகழ்ச்சி அமையவேண்டுமென்ற எண்ணத்தில்தான் நெறியாளர்கள் அப்படித் தூண்டிவிட நினைக்கின்றனர். காரம் மட்டுமே சுவையல்ல. மக்களனைவரும் அதையே விரும்புகின்றனர் என்று நினைத்தால் அது அறிவுடைமையாகாது. அப்படிக் காரம்தான் வேண்டுமென்றாலும் சத்தமிட்டு இரத்தத்தைக் கொதிக்கவைத்து மருத்துவத்திற்குச் செலவு செய்ய வைக்கும் அந்தக் காரத்தை அமைதியாக ஒற்றை வரியிலும் கொண்டுவரலாம்.
சிதம்பரம் அப்போது நிதியமைச்சர். அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி. என்னைச் சுற்றி மட்டுந்தான் காவலர்கள் இல்லை. மற்றபடி அலுவலகத்திலும் அலுவலகத்தைச் சுற்றிலும் துப்பாக்கியேந்திய காவலர்கள். ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட பாதுகாப்புக் காட்சிகள் எப்போதும் எனக்குச் சிரிப்பை வரவழைப்பன. என்னெதிரே மாபெரும் பொருளாதார வல்லுநர்… ‘ இதற்குத்தான் இலண்டனிலிருந்து வெளிவரும் இந்தப்பொருளாதாரப் பத்திரிகையைப் படிக்கவேண்டும் ‘ என்றெல்லாம் பதில்கள் வந்தன. ராஜாளி அவர்… சிட்டுக்குருவி நான்… இலண்டன் பத்திரிகையை நானெங்கே கண்டேன்?! பொறுமையாயிருந்தேன்.
ஒரு கட்டத்தில் ‘’ தொகுதியில் தெருவுக்குத் தெரு வங்கிகளும் ஏடிஎம்களும் திறக்கிறீர்களே… எடுக்கவும் போடவும் பணமில்லை என்கிறார்களே எம் எளிய மக்கள் ? ‘’ என்றபோது ஒளிப்பதிவாளர்கள்கூட நினைத்தனர் நிகழ்ச்சி தொலைந்ததென்று! ஆனால் ஆழம் பார்த்த மனிதரல்லவா! அவர் தமிழ் பேசுவதை நான் மிகவும் ரசிப்பேன்.  சற்றே தூண்டப்பெற்றவராக ஆனால் அதே சமயம் எதையும் முகக்குறிப்பில் உணர்த்தாமல்…. ‘’ எத்தனையோ செய்திருக்கிறேன் தொகுதிக்கு…. அப்பல்லோ மருத்துவமனை வந்திருக்கிறது… வாசன் மருத்துவமனை வந்திருக்கிறது ‘’ என்று அடுக்கினார்.
ஒரு நொடி விட்டு அவரை விட அமைதியாக ‘’ அப்பல்லோ வாசன் போன்ற தனியார் மருத்துவமனைகள் வருவதா பெருமை? ‘’ என்றேன். பந்து என்வசம் வந்தது! பார்த்தவர்களுக்குப் படையலில்லையா இந்நிகழ்ச்சி? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
நாகரிகமாக எளிமையாக இருந்தால் திரும்பிப் பார்க்கவில்லை என்பதற்காக எப்போதும் திருமணக்கோலத்திலோ அல்லது அம்மணக்கோலத்திலோவா தெருவில் நடக்க முடிவெடுப்பது? சமூகத்தின் ரசனையைக் கெடுத்துவிடுவது மிக எளிது. மேன்மையைக் கட்டமைப்பதுதான் கடினம். கெடுக்காமலாவது இருப்போம்.
எப்படியாவது தன்னை பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்தான் பிறரை தூண்டி விட்டு பரபரப்பை ஏற்படுத்த நினைப்பார்கள். அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

  • டி.வி.எஸ். சோமு

 
பெரும்பாலும் நிகழ்ச்சி நெறியாளர்கள் சிகப்பாகவே இருக்கிறார்களே… கறுப்பு என்றால் தாழ்வானது என்ற எண்ணம் ஊடகத்திலும் இருக்கிறதா?
நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும், பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும் இந்த நடுநிலை அநீதியே என்று ஒரு கருத்து உண்டு. உங்கள் கருத்து?
24 மணி நேர செய்தி சேனல்கள், இணைய இதழ்கள் தேவையில்லை என்று ஒரு கருத்து உள்ளது. இவற்றால் தேவையற்றவை எல்லாம் செய்தி அந்தஸ்து பெறுகின்றன என்பதற்கு தங்கள் பதில்?
 மேலும் சில கேள்விகள் – பதில்கள்.. நாளை)