தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 24.08.2010 அன்று விடுத்த அறிக்கை:   
 

விஜயகாந்த் - கருணாநிதி
விஜயகாந்த் – கருணாநிதி

 
“ஒவ்வொரு தலைவருக்கும் ஓர் அடையாளம் உண்டு. பெருந்தலைவர் காமராஜர் என்றால் கல்விக் கண்ணைத் திறந்தவர் என்கிறோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் சத்துணவு தந்த வள்ளல் என்கிறோம். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை கலைஞர் கருணாநிதி என்றால், ‘ஊழல்வாதி’ என்ற அடையாளம்தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது.
இதை நானா முதலில் சொல்கிறேன்? ஊர் சொல்கிறது , உலகம் சொல்கிறது, நல்லோர்கள் சொல்கிறார்கள், நாடே சொல்கிறது. ஏன் உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களே ‘விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி’ என்கிறார்.
எந்த அளவுக்கு தமிழ்நாடு கலைஞர் ஆட்சியில் ஊழல்மயமாகி இருக்கிறது என்றால், அங்கிங்கெனாதபடி அரசுத்துறையில் எங்கும் லஞ்சம் தண்டவமாடுவது மட்டுமல்ல. உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் என்றாலும், இடைத்தேர்தல்கள் என்றாலும், பொதுத்தேர்தல்கள் என்றாலும் மக்களிடம் லஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதை இன்றைய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி அவர்களே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார் கலைஞர்.  சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறவன் நான். ஒவ்வொரு நாளும் எனது முகத்தை நான் பார்த்து மேக்கப் போடாமலா நடிக்க முடியும்? சினிமாவில் கதை, வசனம் எழுதி சம்பாதித்ததாகக் கதை விடுகிற கலைஞருக்கு இது தெரியாதா? நம் முகத்தை நாம் பார்த்துக்கொள்வது பெரிதல்ல. நம் முகத்தை நாட்டு மக்கள் பார்க்க ஆவலோடு இருக்கின்றார்களா என்பதே கேள்வி.