o
 
“திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இந்தக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வியைத் தழுவும்” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.கவில் இருந்து விலக்கப்பட்டவருமான மு.க. அழகிரி தற்போது கூறியிருக்கிறார்.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த மு.க. அழிகிரி, தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். (2014 மார்ச்) பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
 உங்களின் இந்த திடீர் டெல்லி பயணத்துக்கு காரணம் என்ன?
கடந்த 4 ஆண்டுகளாக பிரதமருடன் அவருடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் இணைந்து பல நல்ல காரியங்களை நாட்டுக்கு ஆற்றியுள்ளேன். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்தேன்.
பிரதமரை சந்தித்ததில் ஏதேனும் அரசியல் ரீதியான நோக்கம் உண்டா?
அரசியல் ரீதியான நோக்கம் என்று இருந்தால் நான் அந்த மேடத்தைத் தான் பார்த்திருக்க வேண்டும். மேடம் என்று நான் சொன்னது சோனியா காந்தியை. என் வருகைக்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க மட்டுமே டெல்லி வந்தேன்.
இத்தனை நாட்கள் அவரை சந்திக்காமல் இப்படி திடீரென்று சந்திப்பதில் ஏதேனும் நோக்கம் உண்டா?
அதுதான் சொன்னேனே. நான்கு ஆண்டுகள் அவருடைய மந்திரிசபையில் பணியாற்றினேன். அவருக்கு நன்றி சொல்ல மட்டுமே அவரை சந்தித்தேன்.
பிரதமர் உங்களிடம் என்ன கூறினார்?
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமையாதது குறித்து தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். உங்களோடு இருக்க முடியவில்லை என்று நானும் வருத்தப்படுகிறேன் என்று அவரிடம் கூறினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஏதும் முடிவு எடுக்க முடியாது என்றும் அவரிடம் கூறினேன்.
(2014)  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?
நான் போட்டியிடமாட்டேன். தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும். ஆனால் எந்த மாதிரியான பங்கு இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். இதுகுறித்து என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவை எடுப்பேன்.”
 டில்லியில் இப்படி பேட்டி கொடுத்ததோடு, சென்னை விமான நிலையம் வந்த அழகிரி  அங்கும் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  
“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும்  சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தேன். ஆனால் டெல்லியில் முக்கியமான கூட்டத்தில் இருப்பதால் தாமதம் ஆகும் என கூறப்பட்டது. நான் சென்னைக்கு வர விமான டிக்கெட்டு எடுத்திருந்ததால் வந்துவிட்டேன். மீண்டும் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியை சந்திப்பேன்!”