“பஸ்ஸை எரிச்சிருக்கேன்.. சீட் கொடுங்கம்மா!” : அ.தி.மு.க. கவுன்சிலரின் வித்தியாசமான விருப்பமனு  

12743615_1002648249802028_5427114470998111436_n

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக பதவி வகிப்பவர்  பரிமளம். இவர்,. நகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார்.

சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான கணேசனுக்கு எதிராக, முதல்வரிடம் புகார் அளிக்க, 53 வேன்களில், ஆட்களை திரட்டிக் கொண்டு, போயஸ் கார்டன் வந்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, முடிவு வெளியாகும் முன்பே, “ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி” என்று பேனர் வைத்தும் சர்ச்சையைக் கிளப்பிவர் இவர்.

தற்போது முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே டிஜிட்டல் பேனர் வைத்திருக்கிறார்.

அதில், தன் பெயருக்கு முன்பாக  ‘அம்மாவிற்காக பஸ்சை எரித்து, சிறை சென்ற அம்மாவின் உண்மை தொண்டன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“பஸ்ஸை எரிப்பது பெருமைக்குரிய விசயமா? என்ன செய்வது இதுபோன்று சட்டத்தை மீறி அடாவடி செய்தவர்களுக்கு ஏற்கெனவே அ.தி.மு.கவில் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இப்படி வித்தியாசமான விருப்பமனு கொடுத்திருக்கிறார் இந்த நபர்” என்று காஞ்சிபுரம் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

வாழ்க ஜனநாயகம்!

 

Leave a Reply

Your email address will not be published.