பாகிஸ்தானின் கார்டர்பூர் குருத்வாரா செல்ல எம்-விசா வழங்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

பஞ்சாப்:

பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கார்டர்பூர் குருத்வாராவை பார்வையிட புதிதாக அமைக்கப்படவுள்ள வளாகம் வழியாக வரும் யாத்ரீகர்களுக்கு அந்நாட்டு அரசு எம்-விசா வழங்கவேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமர்சிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்டர்பூர் சாஹிப் செல்ல புதிய வளாகம் வழியாகச் செல்லும் முதல் பயணத்தில் தாமும் பங்கு கொள்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் ‘கார்டர்பூர் சாஹிப்’ வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பஞ்சாப் முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கேப்டன் அமர்சிந்தர் சிங் ஒரு பெரிய ‘கார்டர்பூர் கேட்’ கட்டுமானத்தை அமைக்க இருப்பதாக அறிவித்தார். இது ஸ்ரீ குரு நானக் தேவ்-ன் 550 வது பிரகாஷ் பூரபை நினைவுகூறும் ஒரு நினைவு சின்னமாக நிற்கும் என்று கூறினார்.

புதிதாக அமைக்கப்படவுள்ள வளாகம், அடுத்த குருபூரப்பிற்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதி செய்யும்படி காட்காரியிடம் பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தினார்.

‘கார்டர்பூர் கேட்’-டிற்கு ‘கார்டர்பூர் தவார்’ என பெயரிட வேண்டும் என்ற பஞ்சாப் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்தார்.

புதிதாக திறக்கப்பட இருக்கும் இந்த கார்டர்பூர் வளாகம் தேரா பாபா நானக் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த முதல்வர், தனது அரசாங்கம் தேரா பாபா நானக் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்ட வளர்ச்சிக்காக 965 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தை ஏற்கனவே அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.