bacha-khan-university-story_647_012016120258
பெஷாவர்:
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்தூன்கா மாகாணத்தில் உள்ளது பாஷாகான் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று புகுந்த தீவிரவாதிகள் வகுப்பறைகள் மற்றும் உணவகம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள் என கண்ணில் தென்பட்டவர்கள் மீது சராமரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே பலத்த சத்தத்துடன் வெடிகுண்டும் வெடித்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து,  பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மாணவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் ராணுவமும் விரைந்து வந்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தும் பணியில் ஈடுபட்டது.
தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 25 பேர் பலியாயினர் என தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்த தாக்குதலில்  10 தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் சலிம் பாஜ்வா வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில் ‘‘பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. சுமார் 19 முதல் 25 வயதுடைய தீவிரவாதிகளே தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பல்கலைக்கழக வளாகத்தில் 3000 மாணவர்களும், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள வந்த 600 விருந்தினர்களும் இருந்துள்ளனர். பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி குழந்தைகள் 140 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவமானது உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கல்வி நிறுவனத்தை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.