பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியா? – மாதுரி தீட்சித் மறுப்பு

மும்பை:

ரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் உ.பி. மாநிலத்தின் புனே தொகுதியில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

நரேந்திர மோடி அரசாங்கத்தின் சாதனைகள் பற்றி சுருக்கமாகக் கூறும் வகையில் ‘சம்பர்க் ஃபார் சமர்த்தன்’ எனும் பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் மாதம், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ், நடிகை மாதுரி தீட்சித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இதையடுத்து, அக்கட்சி சார்பில் நடிகை மாதுரி தீட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘2019-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பாஜக தயாரித்து வரும் வேட்பாளர்கள் பட்டியலில் மாதுரி தீட்சித்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனே தொகுதியில் மாதுரிக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், அங்கு அவர் களமிறக்கப்படலாம்,’ என்றார்.

எனினும், இதற்கு மாதுரி தீட்சித் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த செய்தி பொய்யானது, இது வெறும் ஊகம்,” என்றார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான மாதுரி 1984 ல் “அபோத்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் நடித்த “தேசாப்”, “ராம் லகான்”, “தில்”, “பேட்டா”, “ஹம் ஆப்கே ஹெயின் கவுன் ..!”, “அஞ்சாம்”, “மிரிட்யுதண்ட்”, “புக்கார்”, “தில் தோ பாகல் ஹை” மற்றும் “தேவதாஸ்” உட்பட பல வெற்றி படங்களை கொடுத்தார்.