பாமக திட்டங்களை கலைஞர் ஏற்றுக் கொண்ட நன்றி – ராமதாஸ்

ramadoss-pmk1

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று வெளியிட்டிருக்கிறார். நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, என்னவோ… 8 மாதங்களுக்கு வெளியிடப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க.வின் திட்டங்களாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அந்த வகையில் பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் நியமிக்கப் படுவார், ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்படும், பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க வல்லுனர் குழு அமைக்கப்படும், மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும், சிறு&குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் சந்தை அமைப்பு ஏற்படுத்தப்படும், விதை நெல் இலவசம், உழவுக் கருவிகளை வாங்க உதவி, ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம், தோனி மடுவு பாசனத் திட்டம், கல்வித்தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு, கிரானைட் – தாது மணல் விற்பனையை அரசும், தனியாரும் இணைந்து மேற்கொள்ளுதல், தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, வள்ளலார் நினைவிடம் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமானத் திட்டங்கள் அனைத்தும் பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டவையாகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது அண்ணாவின் கொள்கை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு என்பது அவர் வழி வந்த கலைஞர் கொள்கை. அதனால் தான் சிறிதும் யோசிக்காமல் பா.ம.க.வின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து வெளியிடச் செய்திருக்கிறார். மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். லோக் அயுக்தா, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை பா.ம.க. வலியுறுத்தியதும் தான், திமுகவும் அவற்றைப் பற்றி பேசத் தொடங்கியது. அப்போதே திமுகவின் தேர்தல் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதியாகத் தான் இருக்கும் என்று எண்ணினேன். எனது எண்ணம் அப்படியே நடந்தேறியிருக்கிறது.

மது ஒழிப்பு தொடங்கி ஊழல் ஒழிப்பு வரை அனைத்து திட்டங்களுக்கும் பா.ம.க. மட்டும் தான் ராயல்டி வாங்கி வைத்திருக்கிறதா? மற்ற கட்சிகள் அவற்றை பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி தி.மு.க.வினரால் எழுப்பப்படலாம். அந்த வினா நியாயமானது தான். அதேநேரத்தில் இந்தத் திட்டங்கள் எதுவும் புதுமையானவை அல்ல. பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருபவை தான். தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த பெருமைக்குரிய கலைஞர் இத்திட்டங்களை தமது முந்தைய ஆட்சிகளிலேயே நிறைவேற்றியிருக்கலாம். உழவுக்கு தனி நிதிநிலை அறிக்கை, நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சர், முழு மதுவிலக்கு ஆகியவற்றை செயல்படுத்தும்படி கலைஞரிடம் நானே பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால், அப்போதெல்லாம் அவற்றை நிறைவேற்றாமல், இப்போது பாட்டாளி மக்கள் கட்சி அந்த திட்டங்களை வாக்குறுதியாக அளித்த பிறகு, அதை தி.மு.க.வும் அப்படியே பின்பற்றுவதால் தான் பா.ம.க.வின் திட்டங்களை திமுக காப்பியடிப்பதாக கூறவேண்டிய கட்டாயம் உருவெடுக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை பற்றி 6 மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் அவற்றை வலியுறுத்தாதது ஏன்? 1973 ஆம் ஆண்டிலேயே லோக் அயுக்தாவுக்கு இணையான பொது ஊழியர் (குற்ற நடவடிக்கை) சட்டம் கொண்டு வந்ததாகவும், பின்னர் முதல்வராக வந்த எம்.ஜி.ஆர் அதை ரத்து செய்து விட்டதாகவும் கலைஞர் அடிக்கடி கூறுவதுண்டு. உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் நோக்குடன் அச்சட்டத்தை அப்போது கலைஞர் கொண்டு வந்திருந்தால், அச்சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அச்சம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே கலைஞருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, பின்னாளில் சர்க்காரியா ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட புகார்கள் குறித்து அந்த சட்டத்தின்படி விசாரணை நடத்த ஆணையிட்டு, நீதியின் முன் தம்மை நிறுத்திக் கொண்டாரா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு கலைஞர் விடையளிப்பாரா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டு வருவதாக கடந்த காலங்களில் 5 முறை வாக்குறுதிகளை வழங்கி அத்தனை முறையும் தமிழக மக்களை ஏமாற்றியவர் கலைஞர். தமிழ்நாட்டில் முதல் நாள்… முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு என்ற முழக்கத்தை பா.ம.க முன்வைத்தவுடன், அதே முழக்கத்தை தி.மு.க.வும் முன்வைத்தது. ஆனால், இப்போது அதிலிருந்தும் தி.மு.க. பின்வாங்கி விட்டது. முதல் நாளில் முதல் கையெழுத்தில் மது விலக்கை ஏற்படுத்துவதாக கூறிவந்த கலைஞர், இப்போது தனிச் சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக கூறுகிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் பணிகளை மாற்றியமைப்பதற்கு வேண்டுமானால் சட்டத் திருத்தம் தேவைப்படலாம்; அதை பின்னாளில் கூட செய்து கொள்ளலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டத் திருத்தம் தேவையில்லை. ஆனால், இப்போது சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறுவதன் மூலம் மதுக்கடைகளை மூட கூடுதல் கால அவகாசம் கோருகிறார் கலைஞர். இப்போது கூடுதல் அவகாசம் வாங்கிக் கொண்டு, பின்னாளில் மதுவிலக்கை கிடப்பில் போடுவது தான் தி.மு.க.வின் திட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களின் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது.

1989 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தாது மணல் விற்பனையை தனியாருக்கு தாரை வார்த்தது கலைஞர் தான். அதேபோல், கிரானைட் கற்களை வாங்கி விற்பனை செய்யும் உரிமையை 1989 ஆம் ஆண்டில் தமது மகன் மு.க. அழகிரி, முன்னாள் மருமகன் அதிபன் போஸ் ஆகியோருக்கு வாரி வழங்கியது கலைஞர் தான். அப்படிப்பட்ட கலைஞர் இப்போது கிரானைட், தாது மணல் ஊழலை தடுக்கும் வகையில் அவற்றின் விற்பனையை இளைஞர்களைக் கொண்டு நடத்தப்போவதாக கூறுவது நல்ல நகைச்சுவை. மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 50 ஆண்டுகளாக மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வந்தன என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து இத்தனைத் திட்டங்களை காப்பியடித்த தி.மு.க. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான இடுபொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை மட்டும் அறிவிக்கவில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுகவுக்கு அக்கறையில்லை, கல்வி நிறுவனங்களின் வருமானத்தையும், அதன்மூலம் ஆட்சியாளர்களுக்கு வரும் வருவாயையும் இழக்க தயாரில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுப்பதுடன் பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்கும் கட்சி எது என்பதை மக்கள் அறிவார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் சிறப்பான செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறன் கொண்ட கட்சி எது என்பதையும் மக்கள் அறிவார்கள். அந்தக் கட்சி பா.ம.க. தான் என்பதை மே 19 தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.’’என்று தெரிவித்துள்ளார்.