புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன்

டில்லி

புதியதாக தொடங்கப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியைக் குறைக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.  அதில் கலந்துக் கொள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவாவுக்கு வந்துள்ளார்.   கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி என்னும் வருமான வரிச் சலுகை குறித்து அறிவிப்பைத் தெரிவித்தார்.

அதன்படி, “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி விகிதம் 15% ஆக குறைக்கப்படுகிறது.  அத்துடன்  அனைத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கும் கார்பரேட் வரி விகிதம் 22% ஆக இருக்கும்.   இதர வரி விலக்கு மற்றும் எவ்வித சலுகைகளும் கிடையாது.

இந்த நிறுவனங்கள் அனைத்து இதர வரிகளும் உள்ளிட்டவைகள் சேர்ந்து 25.17% வரி செலுத்த வேண்டி வரும்.   வரி விலக்கு மற்றும் சலுகைகள் பெறும் நிறுவனங்களுக்கு மாற்று வரி என அழைக்கப்படும் மேட் வரி 18.5% லிருந்து 15% குறைக்கப்பட்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றப்பட்ட வரி விகிதத்தின்படி அக்டோபர் 1 ஆம் தேதிக்கு மேல் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு மொத்தம் செலுத்த வேண்டிய கார்பரேட் வரி 17.01% ஆக இருக்கும்.   மேலும் இந்த புதிய அறிவிப்பில் நிதி அமைச்சர் ஜூலை 5 ஆம் தேதிக்கு முன்பு திரும்ப வாங்கப்பட்ட பங்குகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்யும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அந்த நிறுவன அலுவலகம் அல்லது கிளை அலுவலகம் இந்தியாவில் அமைந்திருந்தால் இந்த சலுகைகள் அவர்களுக்கும் அளிக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த வரிச் சலுகையால் அரசுகு ரூ.1.45 லட்சம் கோடி வருமானம் குறையும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.