பெட்ரோல் விலை குறைப்பு; வெறும் கண்துடைப்பு: காங்கிரஸ் காட்டம்

டில்லி:

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 4 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக பாஜக நாடகமாடுகிறது…இந்த விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சர்ஜ்வாலா

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இது மக்கள் மனதில் மோடி அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.  தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், மத்திய மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் தங்களது ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வட மாநிலங்களில் சில பெட்ரோல் பங்குகள் பொதுமக்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 4 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில்  கொண்டும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50 குறைக்கப்படுவதாக அறிவித்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சரஜ்வாலா,  “4 மாநிலங்களில் தேர்தல் வருவதால் பொதுமக்களின் கோபத்தை கட்டுப்படுத்த பெட்ரோல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

வெறும்,  ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என குறைப்பதை விட, 2014-ம் ஆண்டின் பெட்ரோல், டீசல் விலை அளவிற்கு தற்போதைய விலையினை கொண்டுவர மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா?” என கேள்வி எழுப்பியவர், “பெட்ரோல் விலை 84 முதல் 90 ரூபாய்க்கும், டீசல் விலை 75 முதல் 80 ரூபாய்க்கும் இந்தியாவில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடி அரசு 15 நாடுகளுக்கு பெட்ரோலை ரூ.34-க்கும், 29 நாடுகளுக்கு டீசலை ரூ.37-க்கும் விற்று வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது”.

மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு. மக்களை ஏமாற்றவே இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.