பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி; மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழாரம்

நாக்பூர்:

மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழ் மாலை சூட்டினார்.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் எம்பியும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி, ஞாயிறு அன்று நாக்பூரில் பெண்கள் சுய உதவிக்குழுவினர் நடத்திய கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது;
நம் நாடு இந்திரா காந்தியைப் போன்ற தலைவர்களைப் பெற வேண்டும். அதிகாரமிக்க, பலம் மிக்க ஆண் தலைவர்கள் இருந்த காலத்திலேயே, அவர்களை விட சிறப்பாக திகழ்ந்தார். அவர் ஏதாவது இட ஒதுக்கீடு பெற்றாரா?
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நான் எதிர்க்கவில்லை. சாதி, மதம், மொழி, பாலினத்தை வைத்து சலுகை பெற்று மட்டுமே உயர்ந்த இடத்துக்கு வந்துவிட முடியாது. அறிவால் மட்டுமே சாதிக்க முடியும்.
சாய்பாபா, கஜானன் மகாராஜ் ஆகியோரிடம் நாம் எந்த மதம் என் கேட்டதுண்டா? சத்ரபதி சிவாஜி, பாபாசாகேப் அம்பேத்கார், மகாத்மா காந்தி ஜோதி புலே ஆகியோரிடம், அவர்கள் என்ன சாதி என்று கேட்டதுண்டா? சாதி மற்றும் மத ரீதியான அரசியலுக்கு நான் என்றுமே எதிரானவன்.

நமது திறமை மற்றும் அறிவைப் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் நல்ல அறிவைப் பெற்றிருந்தால், வீடு தேடி வந்து நமக்கு தேர்தலில் போட்டியிட கட்சி சீட் கொடுக்கும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நான் முற்றிலும் எதிர்க்கவில்லை. சில பிரிவு பெண்கள் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றார்.