பேசுவதைத் தவிர மோடி வேறொன்றும் செய்யவில்லை : காங்கிரஸ் தாக்கு

டில்லி

பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு ஒன்றும் இதுவரை செய்யவில்லை என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மக்களவையில் ஜனாதிபதி உரை மீது நடந்த விவாதத்தின் போது தனது 55 மாத பணி காங்கிரஸ் அரசின் 55 வருட பணிக்கு ஈடானது என தெரிவித்தார்.  விரைவில் தேர்தல் வர உள்ளதால் இது அநேகமாக அவரது கடைசி பாராளுமன்ற கூட்டமாக இருக்கலாம் என சொல்லப்பட்டதற்கு பதிலாக அவர் இதைக் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, ”பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அடுக்கடுக்காக பொய்களை கூறி வருகிறார். எல்லையில் ஏராளமான வீரர்கள் தினமும் மரணம் அடைகின்றனர். ரஃபேல் பற்றிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பது இல்லை. அப்படி இருக்க அவர் எதற்கு தேசிய பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்?

அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட செல்லாத நோட்டு ஆகி விட்டார். இன்னும் 60 நாட்களில் அவருடைய அரசுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் கட்டுக் கதைகள் தப்பான உண்மைகள் போன்றவற்றை உள்ளடக்கிய வெட்டி அரட்டை ஆகும். மோடி பேசுவதைத் தவிர வேறேதும் செய்யவில்லை. மொத்தத்தில் அவர் ஒரு போலி பிரசார அமைச்சராக உள்ளார்” எனக் கூறி உள்ளார்.