புதிய பகுதி: இணைய தளபதிகள்:
ட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்று இருந்து வந்த நிலை இன்றைய நவீன  உலகில் மாறியிருக்கிறது. சமூக இணையதளங்களில் தங்களது கட்சிக்கான குரலாக ஒலிப்பதும் முக்கிய பணியாக ஆகிவிட்டது. அப்படி ஒவ்வொரு கட்சிக்கும் தளபதிகளாய், சமூகவலைதளங்களில் கருத்துப்போர் இடுபவர்கள் பலர். அவர்களில் சிலரது பேட்டிகள் இந்த பகுதியில் தொடர்ந்து வெளியாகும்.
இப்போது, ம.தி.மு.க.வுக்காக சமூக இணையதளங்களில் களமாடும் ஜி. துரை மோகன்ராஜு. பொதுவாக தற்போதைய அரசியல் நிகழ்வுகளை மட்டும் பதிவிடுவது பெரும்பாலோரின் பாணி. இவரே, இன்றைய அரசியல் மற்றுமின்றி அவ்வப்போது பழைய வரலாற்று தரவுகளையும் சுவாரஸ்யமான நடையில் சொல்லக்கூடியவர். இவருக்கென்று தனி ரசிகர் வட்டமே உண்டு.
நமது கேள்விகளும் ஜி. துரை மோகன்ராஜின்  பதில்களும்..

வைகோவுடன் துரை மோகன்ராஜு (உடன் மோகன்ராஜ் மகன் மிதுன் ஆகாஷ்)
வைகோவுடன் துரை மோகன்ராஜு 

அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?
என் தந்தை வழி  பாட்டனார் திரு.கோபால்சாமி தீவிர காங்கிரஸ்காரர்.சுதந்திரப்போராட்ட தியாகி.காந்தியார் நடத்திய ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். வீடு முழுவதும் காந்தி-நேதாஜி என சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இருக்கும்.
என்  தாய்வழி பாட்டனார்  திரு அயோத்தி ராமசாமியும் காங்கிரஸ்காரர் தான்.அக்காலத்தில் கோவில்பட்டி-விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் புகழ்ப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்காரர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஆசிரியையாகப் பணிபுரிந்த என் பாட்டியின் சம்பளத்தையும்-அவரது திருமணத்தின் போது பாட்டிக்குப் போடப்பட்ட நகைகளையும் கூட விற்று காங்கிரஸ் கட்சிக்கு செலவு செய்து கூட்டங்களைப் போட்டவர்.
இப்படியான அரசியல் அடிப்படை கொண்ட எங்கள் குடும்பத்தில் என் அப்பா மட்டுமே திராவிட இயக்கவாதி.
ஆக, அரசியல் ஆர்வம் என் ஜீன்களின் குரோமோசோம்களில் எழுதப்பட்டுவிட்டது  என்றுதான் சொல்ல வேண்டும்.
மதிமுக மீது ஈடுபாடு ஏற்பட தருணம்?
அதற்கு என் அப்பா தான் காரணம்.  என் அப்பா  கோபால்சாமி, திருநெல்வேலி ஜான்ஸ் கல்லூரியில் படித்தார். அப்போது மாணவர் திமுக தலைவர் ஒருவரது தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.  இதனால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
இதை  அறிந்த என் தாத்தா கோபால் சாமி ( அப்பா, தாத்தா  இருவரது பெயரும் ஒன்றேதான்!) வெகுண்டெழுந்துவிட்டார். “வீட்டுப்படி ஏறாதே” என்று மகனை வெளியே அனுப்பிவிட்டார்.
சில நாட்கள் கழிந்த பிறகு, அந்த மாணவர் தலைவரின் அப்பா என் தாத்தாவை சமாதானப்படுத்தினார். பிறகுதான் என் அப்பாவை வீட்டுக்குள் விட்டார் என் தாத்தா.
அந்த மாணவர் தலைவரின் தந்தை பெயர்.. வையாபுரி. மாணவர் தலைவர் பெயர்… வைகோ!
1994ல் வைகோவுக்கு வரவேற்பளக்கும் என் தந்தை கோபால்சாமி
1994ல் வைகோவுக்கு வரவேற்பளக்கும் என் தந்தை கோபால்சாமி

1994 வாக்கில் நீதி கேட்டு நெடும்பயணம் என்று கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு நடைபெயணம் சென்றார் வைகோ. அப்போது சங்கரன் கோயிலில் வரவேற்று மாலை அணிவித்தவர் என் தந்தை கோபால்சாமிதான்.
 
வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி கிராமமும் எங்கள் ஊரும் அருகருகேதான் இருக்கின்றன. இதனால் எனக்கு நினைவு தெரிந்து ஒவ்வொரு பொங்கல் திருவிழாவும் கலிங்கப்பட்டியில் தான் விடியும்.அப்போதே எனக்கு தலைவர் வைகோ மீது ஈர்ப்பு.  நாளுக்கு நாள் அந்த ஈர்ப்பு கூடிக் கொண்டே வந்ததே தவிர  துளியும் குறையவில்லை.அதன் பின் தலைவர் வைகோவின் நாடாளுமன்ற நடவடிக்கைகள்-அவரது போராட்டங்கள்-சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செய்த பணிகள்-ராஜ்யசபை உறுப்பினராக அவர் ஆற்றிய தொண்டுகள் என இன்று வரை நீளும்- பட்டியலிடத் துவங்கினால்-பல டெரா பைட்டுகள் நீளும் போராட்டங்களே மதிமுக மீது ஈர்ப்பு வரவும்–அந்த ஈர்ப்பு துளியளவும் குறையாமல் இருக்கவும் காரணம்.
 
 உங்கள் பதிவுகளைப் பார்த்து கட்சி முக்கியஸ்தர்கள் கருத்து கூறியிருக்கிறார்களா?
கருத்து கூறியதில்லை.பதிவுகளைப் பார்த்ததாக கூறியிருக்கிறார்கள்.
மதிமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் அண்ணன் பொறியாளர் வே.ஈஸ்வரன்,எங்கள் நெல்லை மாவட்டச் செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன்,சக மதிமுக இணையதள நண்பர்கள் என இந்தப் பட்டியல் பெரியது.
ஒரு முறை தலைவர் வைகோ என்னைப் பார்த்து, “பேஸ்புக்ல எழுதுறீங்க போல…நல்லாருக்கு” என்றார்.
அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வை  எப்படி வெளிப்படுத்துவது என்று தவித்தேன். பிறகு முகநூலில் இப்படி எழுதினேன்” “ஒரு சூரியன், இந்த டார்ச் லைட்டைப் பார்த்து நல்ல வெளிச்சம் தருகிறாய் என்று தட்டிக் கொடுத்தது!”
உங்கள் அரசியல் பதிவுகளில் மிக அதிகம் பேர் விரும்பிய அல்லது விமர்சித்த பதிவு எது?
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கிலாந்தில் இருந்த பொழுது சென்னையில் இருந்து ஒருவர் பேஸ்புக் மெசஞ்சரில் மெசேஜ் அனுப்பினார். நான் எழுதுவதைத் தொடர்ந்து வாசித்து வருவதாகச் சொன்னவர்-தலைவர் வைகோவைப் பற்றிய தகவல் ஒன்றைச் சொன்னார்.
“அது வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்த காலகட்டம். காங்கிரஸ் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்தது. இராசீவ் காந்தி பிரதமராக இருந்தார். அப்போது ஈழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. வைகோ ஈழத்திற்கு இந்தியா அமைதிப் படையை அனுப்பியது தவறு என கடுமையாக பேசிக்கொண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆனந்த ஷர்மா என்ற உறுப்பினர், “மிஸ்டர்.வைகோ,நீங்கள் மட்டும் தான் இந்தியா இலங்கைக்கு  அமைதிப்படையை அனுப்பியது தவறு என்று சொல்கிறீர்கள்.ஆனால் அங்குள்ள தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையை நெத்தியில் திலகமிட்டு வரவேற்றுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
ஆனந்த் ஷர்மாவின் இந்த பேச்சை காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.
அடுத்த நொடி-“மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது கூட இந்த இந்திய திருநாட்டில் பலர் அதை வரவேற்றுக் கொண்டாடினார்களே..  அதைப் பற்றி உறுப்பினருக்குத் தெரியாதா?அதற்கு என்ன அர்த்தம்” என்று அதிரடியாக வைகோ கேட்க காங்கிரஸ் கட்சியினரின் ஆரவாரம் அப்படியே அடங்கிப் போனதாம்.ஆனந்த் ஷர்மாவின் முகத்திலோ ஈயாடவில்லயாம்.”
—என்ற இந்த தகவலை எனக்குச் சொன்னார்.சொல்லிவிட்டு இதை உங்கள் பாணியில்–உங்கள் நடையில் எழுதுங்கள் என்றார்.நானும் சரியென்றேன்.
அவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி விஜயராஜ். தலைவர் வைகோவும் அவரும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர் சொல்லி, நான் எழுதிய அந்த பதிவுதான் முதன் முதலில் அதிகம் பேர்களால் பகிரப்பட்ட பதிவு.
அந்த பெரியவர் அடுத்த சில மாதங்களில் இயற்கை எய்திவிட்டார்.
இணையம் மூலம் நடத்தும் பிரச்சாரம் எந்த அளவுக்கு எடுபடும் என நினைக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்த வரையில் இணையம் மிக வலுவான ஒரு தகவல் தொடர்பு ஊடகம்.
இணையத்தின் வலிமையை உணர்த்த சமீபத்திய சென்னை-கடலூர் வெள்ள சம்பவங்களே போதும்.
செயல் அளவில் உங்கள் கட்சிப்பணி என்ன?
கல்லூரி காலத்தில் துவங்கி, இந்தியாவில் பணிபுரிந்த காலங்கள் வரையிலும்–தேர்தல் சமயத்தில்–களத்தில்–எங்கள் வார்டு அளவில் பணி செய்திருக்கிறேன்.
கட்சி துவங்கி 22 வருடங்களில் முதன் முறையாக சங்கரன்கோவில் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில்  (2011 இல் )மதிமுக போட்டியிட்டது. டாக்டர் சதன் திருமலைக்குமாருக்காக  தேர்தல்  பணி செய்த அனுபவமும் உண்டு.
கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தல் சமயத்தில் நான் இங்கிலாந்தில் இருந்தேன். விருதுநகர் தொகுதியைச் சார்ந்த வாக்காளர்கள் தொலை பேசி எண்கள் அடங்கிய டேட்டா பேஸ் கிடைத்தது.பணிக்கு நான்கு நாட்கள் லீவ் போட்டுவிட்டு–அந்த பட்டியலில் இருந்த பலரிடம் தொலைபேசியில் தலைவர் வைகோ விற்கு வாக்களிக்கும்படி பேசினேன்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி களத்தில் பணியாற்றும் எத்தனையோ நண்பர்கள் முன் என் பணி மிக மிக சிறியது.
வரும்  சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்காக களத்தில் பணி செய்யப்போகும் வாய்ப்பை மிக ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.
உங்கள் பதிவுகளுக்கு வரும் கடுமையான பின்னூட்டங்கள் வருவதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
அருமையான சுவையான தயிர் சாதத்தில் திடீரென வாயில் அகப்படும் சிறு கல்லைப்போலத்தான்!
உங்கள் கட்சி இணையதள நண்பர்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்புவது?
ஒரு முறை ஒரு யுத்தத்தில் பிரெஞ்சு இராணுவத்தை எட்டுத் திக்கிலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டனர்.  பிரெஞ்சுப் படையை நெப்போலியன் வழி நடத்தி வந்தார். தளபதிகள் நெப்போலியனிடம் நிலவரத்தைக் கூறி கலவரமடைந்தர்கள். அப்போது நெப்போலியன் துளிகூட கலங்காமல், “எட்டுத் திக்கிலும் எதிரிகள் நம்மைச் சூழ்ந்துள்ளார்களா? அருமை அருமை…! இனி எல்லாத் திசைகளிலும் நாம் அடிக்கலாம்..! அடித்து நொறுக்குங்கள்” என்று சொன்னாராம்.
இதை இன்றைய சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்வோம்…..!” என்பதே ம.தி.மு.க. தோழர்களுக்கு நான் கூற விரும்புவது.