பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத் துறை நிறுவனங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

99

பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலம் உள்ளிட்ட வளங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். பொதுத் துறை நிறுவன தினத்தையொட்டி, தில்லியில் பொதுத் துறை நிறுவனங்களின் அமைப்பான “ஸ்கோப்’ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர், பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், சவால்களை எதிர்நோக்கியிருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களிடம் உள்ள நிலங்கள் உள்ளிட்ட வளங்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.