ராமண்ணா வியூவ்ஸ்:
karuna
 
முக்குலத்தோர் புலிப்படை  என்றால  கிட்டதட்ட யாருக்குமே தெரியாது. ஆனால்  அதன் தலைவரை தெரியும். காமெடியன் கருணாஸ்தான் அந்த படைக்கு தலைமை தாங்குபவர்.
இந்த படைத்தலைவர், “அம்மா” முன் பவ்யமாக நின்று, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டார். அதோடு திருவாடானை தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.
இப்போது அவரது தொண்டர்கள்(!) சிலர், சமூக இணையதளங்களில் ஒரு கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
“அண்ணன் கருணாஸ் அவர்கள், போலீஸ் வேடத்தில் நடித்த படங்கள் பெரு வெற்றி(!) பெற்றிருக்கின்றன. ஆகவே அடுத்து அமையவிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் கருணாஸ் அவர்களை போலீஸ் துறை(!) மந்திரி ஆக்க வேண்டும்” என்பதுதான் அவர்களது பொன்னான கருத்து.
கருணாஸ் செய்யும் காமெடி சேஷ்டைகளைவிட, இந்த காமெடி சிரிக்க வைக்கிறது அல்லவா?
இதே போன்ற காமெடி  25 வருடங்களுக்கும் முன்பாகவே நடந்தது. 1989 சட்டபேரவைத் தேர்தல்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காங்கிரஸ் மீது கோபம் கொண்டு தனிக்கட்சி துவக்கி நடத்திய நேரம். பெயர் த.மு.மு.க. என்று நினைவு. தமிழக முற்போக்கு முன்னேற்ற கட்சியோ என்னவோ. அப்போது இருந்த அ.தி.மு.க. ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து அக் கட்சி போட்டியிட்டது.

ராமண்ணா
ராமண்ணா

அதன் செயற்குழு கூட்டம் தஞ்சை, ஞானம் தியேட்டரில் நடந்தது. அந்த தியேட்டர் டேமேஜாக இருந்ததால், படம் வெளியிடுவதை நிறுத்திவிட்டு இது போன்ற கூட்டங்களுக்கு வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார்கள்.
அந்த செயற்குழுவில், முக்கியமான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான தீர்மானம் இது:
“நமது கட்சியின் பொதுச் செயலாளர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் காவல்துறை அதிகாரியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது தோற்றமும் மிடுக்கும் காவல்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஆகவே அடுத்து அமையவிருக்கும் நமது ஆட்சியில்(!) மேஜர் அவர்களுக்கு, போலீஸ் துறை மந்திர பதவியை அளிக்க வேண்டும்!”
இது எப்படி இருக்கு?