மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக கிருஷ்ண வி கிரி தேர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக கிருஷ்ண.வி.கிரி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கிறேன் என்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

kiri

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும்.

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். கூட்டணியில் யார் தலைவர் என்பதை இப்போது எனக்கு சொல்ல தெரியவில்லை. கூட்டணியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நிர்வாகிகள் எனக்கு வழங்கியுள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை மகேந்திரன் தொடங்குவார். மக்கள் நீதி மய்யத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதை ஜனவரி 31ம் தேதி அறிவிப்பேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் “ என்று கூறினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் மற்றும் நிர்வாகக் குழு ஆலோசராகவும் பணியாற்ற அசென்சர் (இந்தியா மற்றும் ஆசியா பசிஃபிக்) நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறையின் முன்னாள் துணைத் தலைவர் நிர்வாக பங்குதாரராக பணியாற்றிய கிருஷ்ண வி கிரியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடும்பத்திற்கு வரவேற்கிறேன் என்று கமல் குறிப்பிட்டார்.

கிருஷ்ண வி கிரியின் 27 வருட செயல் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அனுபவமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்புகிறேன் என்று கமல் தெரிவித்தார்.