மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

போபால்: சிவராஜ்சிங் சவுகானால் அமைச்சரவையை அமைக்க முடியாவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை உருவாக்க முடியாவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி அமைப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விவேக் தங்கா தெரிவித்துள்ளார்.

மார்ச் 23 அன்று பதவியேற்றதிலிருந்து, சவுகான் தமது அமைச்சரவையில் ஒரே அமைச்சராக இருக்கிறார். இது குறித்து ஜனாதிபதிக்கு விவேக் தங்கா, கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மத்திய பிரதேசத்தின் 7.5 கோடி மக்கள் அரசியல் அமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. சிவராஜ் சிங்,  அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு மனிதராக இருக்கிறார். மாநிலத்தின் ஆளுநரும் நடப்பதை கண்டும், காணாதது போல அமைதியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.