மத வழக்கங்கள் சட்டத்தை மீறினால் மாற்றப்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்

--

டில்லி

பரிமலையில் இளம் பெண்கள் அனுமதிப்பதில் சட்ட மீறல் இருந்தால் அதை மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.   இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அனுமதி மறுப்பு செல்லும் என தீர்ப்புகள் வந்தன.  அதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையில் உள்ள அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இந்த அமர்வு பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு உள்ளது என கேட்டிருந்தது.   அதற்கு மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும் தற்போது நாயர் சமூகத்தின் சார்பில் வாதிடும் பராசரன் நேற்று அமர்வில் பதிலளித்தார்.

அவர், “ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி.   அதனால் ஐயப்பனை நம்பும் பக்தர்கள் மிகவும் சுத்தமாக விரதம் இருந்து வருகின்றனர்.   அதை ஒட்டி மாதவிலக்கு உண்டாகும் வயதில் உள்ள பெண்கள் ஆலயத்துக்கு வர தடை செய்யப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு சட்டப்படி மத வழக்கங்கள் அடிப்படை உரிமை ஆகும்.   அதை தடுக்க முடியாது.

சமூக சீர்திருத்தம் செய்வோர் எல்லாம் இந்து மத வழக்கங்களை மட்டுமே சீர் திருத்த முயலுகின்றனர்.   இது மிகவும் தவறானது.   அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்னும் போது இந்து மதத்தினரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கையை மட்டும் மாற்ற நினப்பது சட்டத்துக்கு விரோதமானது” என தெரிவித்தார்.

அவருடைய வாதத்துக்குப் பின் அமர்வின் நீதிபதி சந்திரசூட், “அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அனைத்து மதத்தினருடைய வழிபாட்டு தலங்களும் பொதுவானவைகளே ஆகும்.  எந்த ஒரு வழிபாட்டு தலத்திலும் சாதி அல்லது பாலின வேறுபாடுகளைக் காட்டி அனுமதி மறுப்படு தவறாகும்.   எந்த மதத்தில் அவ்வாறு சட்ட விரோதமான பழக்கங்கள் இருந்தாலும் அதை அரசு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.