மம்தா தர்ணா: சிபிஐ ஏன் சிறப்பு நீதிமன்றத்தை அணுகவில்லை: முன்னாள் சிபிஐ இணைஇயக்குனர் எஸ்.சென் கேள்வி

டில்லி:

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் விசாரணைக்கு வர மறுத்தது,  குறித்து சிபிஐ ஏன், அதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அணுக வில்லை என்று  சிபிஐக்கு முன்னாள் சிபிஐ இணைஇயக்குனர் எஸ்.சென் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர் பாக,  கொல்கத்தா காவல்துறை ஆணையர்  ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாததால், நேற்று 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள்,. ராஜீவ் குமார் இல்லத்துக்கு விசாரணைக்காக  வந்தனர்.

ஆனால்,  சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்த மாநில காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விடுவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மம்தா, உடடினயாக உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய நிலையில், பாஜக அரசின் தூண்டுதலால்தான் சிபிஐ அத்துமீறி நுழைந்ததாகவும், மாநில அரசை கலைக்கும் நோக்கிலேயே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சிபிஐ தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா சம்பவம் குறித்து முன்னாள் சிபிஐ இணைஇயக்குனர் எஸ்.சென் கூறியதாவது,

அரசியல்வாதிகள் சிபிஐ பயன்படுத்த விரும்புகிறார்கள்,  ஆனால் ஏஜென்சிகள், அரசியல் வாதிகள்  தங்களை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு மட்டுமே உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, சிறப்பு நீதி மன்றத்தை நாடியிருக்க வேண்டும். இந்த புகார் தொடர்பாக எங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ ஏன்  சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தை அணுகவில்லை… என்று கேள்வி எழுப்பியவர், இந்த வழக்கில் சிபிஐ ஏன் சிறப்பு நீதிமன்றத்தை அணுகவில்லை என்பது எனக்கு புரியவில்லை என்றும் கூறி உள்ளார்.