மலேசியாவின் மகாதீர் இஸ்தானா நெகாராவுக்கு பயணம்… ஒற்றுமை அரசாங்கம் அமைக்க அரசு முயற்சி…

கோலாலம்பூர்:

டாக்டர் மகாதீர் முகமத், தேசிய தொலைக்காட்சியில் தனது அரிய உரையின் நிகழ்த்தி ஒரு நாளே ஆகியுள்ள நிலையில், இஸ்தானா நெகாராவுக்கு சென்றுள்ளார். இந்த வார தொடக்கத்தில் அவர் ராஜினாமா செய்ததற்காக மன்னிப்பு கோரியது, பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் முகமது தெரிவித்துள்ளது, மலேசிய அரசியல் களத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் அவரை வலியுறுத்தி வந்தன.

ஆனால் மகாதீர் ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆனால் மறுநாளே அவரைப் பதவி விலகிச் சொன்னவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரும் கூட மீண்டும் பிரதமராக வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு நிலைமை திடீரென மாறியுள்ளது.

இதையடுத்து ‘ஒற்றுமை அரசு’ அமைப்போம் எனும் யோசனையை மகாதீர் முன்வைத்துள்ளதாகவும், மலேசிய அரசியல் கட்சிகள் அதைப் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய கையோடு தாம் சார்ந்திருந்த பெர்சாத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் மகாதீர் விலகியுள்ளார். இதையடுத்து மலேசிய மாமன்னரை அவரது அரண்மனையில் சந்தித்துப் பேசிய மகாதீரிடம், புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்கும்படி மாமன்னர் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்ற மகாதீர் தமது பணியை மீண்டும் துவங்கியுள்ளார்.

இந்தத் திடீர் அரசியல் குழப்பங்கள் காரணமாக தேசிய முன்னணி வட்டாரங்களில் உற்சாகம் நிலவுகிறது. அக்கூட்டணியில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் ‘அம்னோ’ (UMNO), ‘மசீச’ எனப்படும் மலேசிய சீன சங்கம் (MCA), மஇகா எனப்படும் மலேசிய இந்தியர் சங்கம் (MIC) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் மகாதீர் பிரதமர் பதவியில் நீடிக்க ஆதரவு அளிப்பதாக தேசிய முன்னணி அறிவித்தது. பிறகு ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் தலைமையில் அமையும் புதிய ஆட்சியில் இம்மூன்று கட்சிகளும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. இதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான ‘பாஸ்’ ஆதரவும் மகாதீருக்குக் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், மலேசியாவில் சில மாநில அரசுகளுக்கும் திடீர் சிக்கல் முளைத்துள்ளது. சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த பொதுத்தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சில மாநிலங்களையும் கைப்பற்றியது. தற்போது அக்கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சி விலகியதை அடுத்து, வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி கைநழுவிப் போகும் சூழல் நிலவுகிறது.

ஜொகூர், மலாக்கா, பேராக் உள்ளிட்ட மாநிலங்களில் பெர்சாத்து கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அங்குள்ள பக்காத்தான் கூட்டணி அரசுகள் கவிழக்கூடும்.

எனினும் பினாங்கு, சிலாங்கூர் மாவட்டங்களில் பக்காத்தான் ஆட்சிக்கு இதுவரை எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு. எனவே எந்த தனி நபருக்கு அல்லது அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் சட்டம் விவரிக்கிறது. இதனால், மன்னரின் முடிவைப் பொறுத்தே நாட்டின் அடுத்த பிரதமர் யாரென்பது தெரிய வரும்.