up

மாட்டுக்கறி உண்டதாக இஸ்லாமிய முதியவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலயில், மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறி தொடர்பாக வன்முறை ஏற்பட்டிருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம், நகாரியா. இங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று பிடித்துச் செல்லப்பட்டு, கறிக்காக கொல்லப்பட்டதாக  தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வயல்வெளிக்குச் சென்று கிராம மக்கள் பார்த்தபோது, அங்கு பசுவின் உடல் தோல் உறிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதையடுத்து கிராம மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி வழியே சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அதை போலீஸார் தடுக்க முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரின் வாகனங்களுக்கு கிராம மக்கள் தீ வைத்ததனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மைன்புரி மாவட்ட ஆட்சியர் சந்திரபால் சிங் தெரிவித்துள்ளார்.

கர்கால் துணை ஆட்சியர் விஜய் பிரதாப் “மேய்ந்து கொண்டிருந்த பசு பிடித்துச் செல்லப்பட்டு வதை செய்யப்பட்டதா? அல்லது இறந்த பசுவின் தோல் அகற்றப்பட்டதா என்று தெரியவில்லை. பசுவின் உடலை பரிசோதித்தபிறகே இது தெரிய வரும்’ என்றார்.

நகாரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தாத்ரி பகுதியில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக இஸ்லாமிய  முதியவர் ஒருவர்  அடித்துக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் மாட்டுக்கறி தொடர்பாக கலவரம் மூண்டுள்ளது.