மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகளில் துப்பாக்கியா? : அமெரிக்க மக்கள் கண்டனம் 

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள குழு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கி சூடு நிகழ்வது கடந்த 1999 ஆம் வருடத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த துபாக்கி சூட்டில் பலர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதை ஒட்டி அதிபர் டொனால்ட் டிரம்ப் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தார்.

அந்தக் குழுவின் தலைவராக கல்வித்துறை செயலர் பெர்சி டிவோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை ஒட்டி அமைக்கப்பட்ட இந்த குழு பள்ளிகளின் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்தது. மேலும் துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை அதிகரிப்பது குறித்தும் பலரிடம் கருத்தை இந்தக் குழு கேட்டறிந்தது.

தற்போது இந்தக் குழு 180 பக்கம் கொண்ட தனது ஆய்வு அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை அதிகரிக்கும் யோசனையை நிராகரித்துள்ளது. பெரும்பாலான வேளைகளில் பள்ளிகளில் மாணவர்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கி அவர்கள் சொந்த துப்பாக்கி அல்ல என்பதையும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கிகள் ஆகும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினரை காவலராக அமர்த்தவும் அறிக்கை யோசனை தெரிவித்துள்ளது. முக்கியமாக மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அந்த அறீக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்கர்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிக்கும் என பல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் அமெரிக்க மக்கள் சுதந்திர சங்கம் , “அமெரிக்காவில் நடக்கும் துயர சம்பவங்களால் டிரம்ப் நிர்வாகம் மாணவர்கள் சுதந்திரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்கிறது. மாணவர்களின் ஒழுக்கக் கேட்டை களைவதற்கு பதில் அதை வளர்க்க யோசனை சொல்கிறது” என தெரிவித்துள்ளது