IMG_20160126_113334

வாஷிங்டன்:
மந்தமாகவும், மெதுவாகவும் செயல்படும் மனிதர்களை  நாம் ‘சோம்பேறி நாய்’ என்று திட்டுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சோம்பேறியாக இருந்த நாய் ஒன்று சாதனை படைத்து மனிதர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மாநிலம் அலபாமா. இங்கு எல்கமான்ட் என்ற அரை மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. பந்தயம் தொடங்க சில விநாடிகள் இருந்த சமயத்தில்  அந்த பகுதியை சேர்ந்த ஏப்ரல் ஹெம்லின் என்பவர் தனது வீட்டில் இருந்த செல்லப் பிராணியான லுதிவனே என்ற நாயை வெளியில் உலாவுவதற்காக அவிழ்த்து விட்டார்.
இந்த நாய் மாரத்தான் ஓட்டத்திற்காக மக்கள் கூடியிருப்பதை கண்டு அங்கு வந்து நின்றது. அப்போது துப்பாக்கி குண்டு முழங்க ஓட்டம் தொடங்கியது. ஓட்டத்தில் 165 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தோடு கூட்டமாக இந்த நாயும் ஓடத் தொடங்கியது.
கூட்டத்தில் ஓடி வந்த இந்த நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரு வழியாக ஓட்டம் நிறைவுக்கு வந்தது. முன்னாள் ஓடி வருபவர்களை போட்டியாளர்கள் கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். என்ன ஆச்சர்யம்.. அந்த நாய் ஏழாவதாக ஓடி வந்தது.
போட்டியாளர்களும், பந்தய வீரர்களும், பார்வையாளர்களும் கை தட்டி நாயை வரவேற்றனர்.
மொத்தமுள்ள 13.1 மைல் தூரத்தை ஒரு மணி நேரம் 32 நிமிடம் 56 விநாடிகளில் இந்த நாய் கடந்து வந்தது. போட்டி நடத்தியவர்கள் அந்த நாயுக்கும் விருது வழங்கினர். பலரும் அந்த நாயை போட்டோ பிடித்தனர். அதற்கும் சளைக்காமல் அந்த நாய் போஸ் கொடுத்தது. போட்டோ வேக வேமாக சமூக வளை தளங்களில் பரவியது. அதிலும் ஆதரவு குவிந்தது.
இந்த போட்டியில் நான்காவது இடத்தை பிடித்த ஜிம் கிளெமென்ஸ் என்பவர் கூறுகையில்,‘‘ பாதி வழியிலேயே அந்த நாய் வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிடும் என்று நினைத்தேன். ஆனால் அது என் பின்னால் ஓடி வந்து கொண்டே இருந்தது’’ என்றார்.
வீரர்கள் சிலர் கூறுகையில்,‘‘ ஓட்டத்தின் போது சக நாய்களை கண்டவுடன் இந்த நாய் பல முறை நின்றுக் கொண்டது. இரண்டு மைல் தூரத்தில் ஒரு முயல் இறந்து கிடந்த சமயத்திலும் நின்று மோந்து பார்த்தது. எனினும் தொடர்ந்து ஓடி வந்துவிட்டது’’ என்றனர்.
நாயின் உரிமையாளர் கூறுகையில்,‘‘ செல்போன் மெசேஜ் மூலம் எனக்கு வந்த போட்டோவை வைத்து தான் அது எனது நாய் என்பது தெரியவந்தது. நான் வீட்டின் கதனை திறந்தவுடன் மாரத்தான் ஓட்டம் துவங்க இருந்த இடத்தை நோக்கி தான் ஓடியது. தனது சொந்த முடிவின் மூலமே அது ஓடியுள்ளது.  இது முழு மாரத்தான் ஓட்டத்தையும் நிறைவு செய்தது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் என்றால் அது உண்மையிலேயே சோம்பேறி தனம் கொண்டது’’ என்றார்.
போட்டி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தனது பேஸ்புக்கில், ‘‘ இந்த நாயின் மூலம் எங்களது மாரத்தான் ஓட்டம்  உலக வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது’’ என்றார்.