மாறன் பிரதர்ஸ் மீதான சட்டவிரோத தொலைபேசி வழக்கு: செப்டம்பர் 14ந்தேதி முதல் விசாரணை

சென்னை:

ட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கின் விசாரணை செப்டம்பர் 14ந்தேதி தொடங்கும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, சென்னை  போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து, அதன்மூலம் தனது சகோதரர் நிறுவனமான சன்டிவி நிறுவனத்துக்கு பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாததால், மாறன் பிரதர்ஸ் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும்  சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

ஆனால், அதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்றைய விசாரணைக்கு மாறன் பிரதர்ஸ் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.