ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுக்கின்றன, போராடி வருகின்றன. இந்த நிலையில், “ஜல்லிக்கட்டு தேவை இல்லை” என்ற குரலும் ஒலிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள், “பிராணி வதை” என்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அதையும் மீறி, வேறு காரணங்களை சொல்கிறார் கை. அறிவழகன்.
 
9
 
“சாதிய நச்சு” பண்பாட்டின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் தான் தமிழகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது, “ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை ஊருக்கு உள்ளே சேர்க்காதே” என்று சொல்பவன் அதைத் தனது பண்பாடு என்று தான் பெயரிட்டுக் கொள்கிறான், பறையனையும், தேவேந்திரனையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று சொல்பவன் அது தனது உயர் கலாச்சார மரபு என்று தான் தனது குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறான்.
சாதிய மேலாதிக்கமும், ஒடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணிகளும் எந்த ஒரு இடத்திலும் மஞ்சுவிரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ நிகழ்வது இல்லை என்று குமுறுகிற சீமான் போன்றவர்கள், தமிழகத்தின் (குறிப்பிட்ட நான்கு தென் மாவட்டங்களில்) ஒவ்வொரு கிராமத்திலும் மாடுகளில் மட்டுமல்ல, கண்மாய் மடைகளில் இருந்து மரங்கள் வரைக்கும் சாதிய நச்சின் நிழல் படிந்திருப்பதை அறிந்தும் அறியாதவர்கள் போல நடிப்பார்கள்.

கை. அறிவழகன்
கை. அறிவழகன்

ஊரில் வசிக்கும் எல்லா சமூகத்துக்கு மக்களுக்கும் ஒரு வருடம் என்று பரிவட்டம் கட்டவும், செங்கோலை ஏந்தி முதல் மரியாதை பெற்றுக் கொள்ளவும் சீமான் போன்ற தமிழ் தேசிய வேடதாரிகள் முன்னின்று போராடுவார்களா??? மஞ்சு விரட்டுகளிலும், ஜல்லிக்கட்டுகளிலும் மறைமுகமாக முன்னிறுத்தப்படும் சாதிய மேலாதிக்க மனப்போக்கும், ஒடுக்குமுறைக்கான துவக்கமும் தான் உங்கள் பண்பாடு, உங்கள் கலாச்சாரம் என்றால் எனது குழந்தைகளுக்கு உங்கள் மஞ்சு விரட்டும் வேண்டாம், ஜல்லிக்கட்டும் வேண்டாம்.
காலம் காலமாக அங்கேயே உழுது பயிரிட்டு கண்மாய்க் கரைகளில் புரண்டு நீங்கள் வாய் கிழியப் பேசுகிற தமிழ் தேசிய மறைகளை உருவாக்கியவனின் வேட்டியை இன்னுமும் உருவிக் கொண்டு அவனை அரை நிர்வாணப் பக்கிரியாகவும், கக்கத்தில் துண்டு கட்டிக் கொண்டு நிற்கிற குப்பனாகவும், சுப்பனாகவும் வைத்துக் கொள்ளும் கயமைத்தனம் தான் உங்கள் உயர் பண்பாடு இல்லையா? அந்த இழி நிலையை நீக்கும் கலாச்சாரம் குறித்துக் கேள்வி கேட்டால் செவிடர்களைப் போல விலகி நடக்கும் எல்லாக் கட்சியின் இடிதாங்கிகளும் வீர விளையாட்டுக்கு வரிந்து கட்டிக் கொண்டு பேசுவது வேடிக்கையானதுதான்.
எனக்கும் சங்கத்தமிழில் இருந்தும், புறநானூற்றில் இருந்தும் காட்சியாய் விரிகிற தமிழனின் வீர விளையாட்டை உயர்த்திப் பிடிக்க ஆசையாகத் தான் இருக்கிறது, எல்லா ஊரிலும், அரசு சார்பாக நடத்தப்படுகிற ஜல்லிக்கட்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஊரில் வாழும் ஒவ்வொரு சமூகத்துப் பெரியவருக்கும் பரிவட்டம் கட்டுங்கள் பார்ப்போம், சமூக நீதியை அழிக்கும் நாட்டாமை அம்பலங்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் உங்கள் போலி வீரத்தையும், அநீதியையும் ஏற்றுக் கொண்டு எந்த பண்பாடும், கலாச்சாரமும் எமது குழந்தைகளுக்குத் தேவை இல்லை.
ஜல்லிக்கட்டும், மஞ்சுவிரட்டும் வெறும் சடங்கோ விழாவோ மட்டும் அல்ல, அது ஒரு சமூக இயக்கம், தென் மாவட்டங்களில் அந்த சமூக இயக்கத்தின் பின்னிருக்கிற வேறுபாடுகளையும், முரண்களையும் களையும் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அந்த நிகழ்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது நாகரிக சமூகத்தின் அரசியல் அல்ல, அந்த சமூக இயக்கத்தில் இன்னும் எஞ்சி இருக்கிற சாதிய மேலாதிக்கத்தையும் பேசுவதும், களைய முற்படுவதுமே முற்போக்கு அரசியல்.
தென் மாவட்டங்களில் மஞ்சு விரட்டுகளும், ஜல்லிக்கட்டுகளும் அதன் பின்னணியில் நிகழும் பல்வேறு சடங்குகளும், இயக்கங்களுமே சாதிய வன்முறைகளுக்கான அடிப்படைத் தளம், இன்றும் தென் மாவட்டங்களில் சாதிய மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கான ஒரு தளமாகவே பொங்கல் விழாவுக்குப் பின்னே நிகழும், மஞ்சுவிரட்டுகளும், ஜல்லிக்கட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான தரவுகளை தென்மாவட்டங்களில் ஒவ்வொரு ஊரில் இருந்தும் என்னால் ஆணித்தரமாக நிறுவ முடியும். ஆக, மஞ்சுவிரட்டையும், ஜல்லிக்கட்டையும் வீர விளையாட்டு என்று ஜல்லி அடிக்கும் யாவரும், அதன் பின்னே இயங்குகிற சாதிய மேலாதிக்கம் குறித்து மௌனம் காப்பது கள்ள மௌனம் மட்டுமல்ல, கயமைத்தனமும் கூட.
அந்த நிலை மாறும் வரையில் நான் இப்படித்தான் சொல்வேன், ”
“சமூக நீதியும், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மனிதனின் உயர் பண்பாடும் மறுதலிக்கப்படும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து மஞ்சுவிரட்டுகளும், ஜல்லிக்கட்டுகளும் அழிந்து போகட்டும்.”