முத்தலாக் மசோதா: மக்களவையில் இன்று விவாதம்… நிறைவேறுமா?

டில்லி:

ஸ்லாமியர்களின் ‘தலாக்’ எனப்படும் உடனடி விவாகரத்து முறையை தடுக்கும் வகையில் கொண்டு வரப் பட்டுள்ள முத்தலா மசோதா குறித்து இன்று பாராளுமன்ற மக்களவையில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதத்தில் அனைத்து எம்பிக்களும் பங்குபெற வேண்டும் என்று பாஜக தலைமை தனது கட்சி எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இஸ்லாமிய பெண்களை உடனடியாக மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை தடுக்கும் வகையில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட முத்தலாக் மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில்  எதிர்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஒருசில கோரிக்கைகளை இணைத்து திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா  கடந்த 17ந்தேதி  மத்திய அமைச்சர் ரவிசங்கரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து 20ந்தேதி விவாதிக்கப்படும் என மக்களவை நிகழ்ச்சி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேகதாது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து அமளி ஏற்பட்டு பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், முத்தலாம் மசோதா குறித்து இன்று விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மசோதா மீதான விவாதத்தில் பங்குபெற விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி இன்று விவாதம் நடைபெற உள்ளது. இன்று அந்த மசோதா மீது விவாதம் நடைபெறவுள்ளதால் பாஜக எம்.பிக்கள் தவறாது நாடாளுமன்றம் வரவேண்டும் என பா.ஜ.க கொறடா உத்தரவிட்டுள்ளார்.

முத்தலாக் குறித்து ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், அவசர சட்டத்திற்குரிய ஆயுட்காலமான 6 மாதத்திற்குள் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று மக்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் விவாதிக்கப்படும்.

இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே முத்தலாக் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும். இல்லையேல், குடியரசு தலைவரின் அவசர சட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் காலாவதியாகி விடும் என்பத குறிப்பிடத்தக்கது.