முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது

தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முள்புதரில் மூர்த்தி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. கடந்த வருடம் திருமலை என்பவைரை அரிவாளால் வெட்டியதால் மூர்த்தி ஜெயிலுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த திருமலையிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் திருமலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் மூர்த்தியை கொலை செய்தது தெரிய வந்தது. நேற்று மதியம் திருமலை அவரது நண்பர்கள் சரவணன், பசுபதி, மோகன் ஆகியோர் மூர்த்தியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக மூர்த்தியை சந்தித்த அவர்கள் இனி பழைய பகையை மறந்து நண்பர்களாக இருப்போம் என்று கூறினார்கள்.

அனைவரும் மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்போம் என்று கூறி மூர்த்தியை மணலிக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லோரும் மது குடித்தனர். அப்போது மூர்த்திக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்தார். திரும்பும் வழியில் கொருக்குப்பேட்டை-மணலி சாலை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே மூர்த்தியை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை 4 பேரும் சேர்ந்து கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் பிணத்தை தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே முள்புதரில் வீசி சென்றனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திருமலை உள்பட 4 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி