மேற்கு வங்காளத்தில் பாஜ ரத யாத்திரைக்கு தடை: கொல்கத்தா உயர்நீதி மன்றம் அதிரடி

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அரசு மேற்கொள்ள இருந்த ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மாநிலஅரசின் தடையை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம், ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய உயர்நீதி மன்றம், நேற்று அரசு சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக ரத யாத்திரைக்கு தடை விதித்துள்ளது. இது பாஜக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தில்மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவை தலையெடுக்க விடாமல் மம்தா அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேர்தலுக்குள், பாஜக கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில்,  மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதி களையும் வலம் வரும் வகையில் சுமார் 45 நாட்கள்,  3 இடங்களில் ரத யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்திருந்தது.

இந்த ரத யாத்திரை காரணமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதி மாநில அரசு, ரத யாத்திரைக்கு தடை விதித்திருந்து. இதை எதிர்த்து பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேற்குவங்க மாநிலத்தில் ரத யாத்திரையை மேற்கொள்ள பாஜக கட்சிக்கு நிபந்தனைகளுடன் கூடிய  அனுமதி வழங்கியது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, ரத யாத்திரையை மேற்கொள்ளலாம் என தனிநபர் நீதிபதி தப்ரதா சக்ரபோர்தியின் தீர்ப்பு செல்லாது எனக் கூறி உத்தரவிட்டது.

கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில்,  திடீர் தடை உத்தரவு காரணமாக பாஜகவினர்  அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.   உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜகவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You may have missed