மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம்

PM modi

டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இருவர் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் கடந்த ஒரு ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் உயர்ந்ததாக தெரிவித்துள்ளார். மற்றொரு அமைச்சரோ, மோடி சென்று வந்த நாடுகளில் இருந்து வந்த முதலீடுகளால் 40 சதவீதம் உயர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த இருவர் கூறியதும் கட்டுக் கதை என்று உண்மையான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் கொள்கை மற்றும் திட்டத் துறையின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில்,  கடந்த 2014&15ம் ஆண்டில் 23 சதவீதம் உயர்ந்து, 44.88 பில்லியன் டாலராக இருந்துள்ளது. 2013&14ம் ஆண்டில் இது 36.39 பில்லியன் டாலராகும்.
அந்நிய முதலீட்டில் இருந்து மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர முதலீடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், 2014&15ம் ஆண்டில் 27 சதவீதம் உயர்ந்து 30.93 பில்லியன் டாலராக அந்நிய நேரடி முதலீடு இருந்துள்ளது. 2013&14ம் ண்டில் இது 24.3 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அதனால் 49 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான தகவல்.
அதே சமயம் ரூபாய் கணக்கில் பார்த்தாலும், 2014&15ம் ஆண்டில் 28 சதவீதம் உயர்ந்து ஒரு கோடியே 89 லட்சத்து 107 கோடி ரூபாயாக இருந்துள்ளது. 2013&14ம் ஆண்டில் ஒரு கோடியே 47 லட்சத்து 518 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதனால் எப்படி பார்த்தாலும் மோடியின் முதல் நிதியாண்டில் அந்நிய முதலீடு 23 முதல் 28 சதவீதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களில் கூட 49 சதவீதம் என்பது இல்லை. அந்நிய நேரடி முதலீடுகளின் புழக்கம் 2014&15ம் ஆண்டில் 34 பில்லியன் டாலர் என்றும் இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் உயர்வு என ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.