ரஜினி போஸ்டரை காரணம் காட்டி நால்வர் கடத்தல்! சங்கிலி பறிப்பு!

1

ன்று வெளியான வார இதழ் ஒன்றில் போஸ்டரில் “ரஜினியால் கெட்டோம்!: போராட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்” என்று அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இதற்கான போஸ்டரை வாணியம்பாடி பகுதியில் ஒட்டும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்  சென்னையைச் சேர்ந்த  கார்த்திக், சதீஷ் மற்றும் இருவர்.

அதன்படி நேற்று இரவு இவர்களும் இன்னும் இருவரும் மினிவேனில் சென்று வாணியம்பாடி பகுதியில் ஒட்டினர். அங்குள்ள வளையம்பட்டு ரயில்வே பாலம் அருகில்  நேற்று இரவு 11 மணி அளவில் இந்த போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் இவர்களை சுற்றி வளைத்தது. தங்களை ரஜினி ரசிகர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கும்பல், “ரஜினியால் கெட்டோம் என்று  எப்படி போஸ்டர் ஒட்டலாம். எங்கள் தலைவர் ரஜினியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சொல்லி போஸ்டர் ஒட்டிய நால்வரையும் தாக்கியது அந்த கும்பல்.  அதோடு போஸ்டர்களையும் கிழித்தெரிந்தது..

பிறகு போஸ்டர் ஒட்டியவர்களின் மினி வேனிலேயே அவர்களை வலுக்கட்டாயமாக ஏற்றி, ஆளில்லாத பகுதிக்குச் சென்றது அந்த கும்பல். . போஸ்டர் ஒட்டியவர்கள் வைத்திருந்த செல்போன்களை பிடுங்கியது.  இவர்களில் ஒருவர் அணிந்திருந்த தங்க செயின், மற்றும் அவர்கள் வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தையும் பிடுங்கியது.

அதோடு, போஸ்டர் ஒட்டியவர்களின் உறவினர்களுக்கு போன் செய்து, “ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் நால்வரையும் விடுவோம்” என்று மிரட்டியது.

போஸ்டர் ஒட்டியவர்களின் உறவினர்கள் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, மிரட்டல் கும்பலைச் சேர்ந்த நால்வரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த போது வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஜோதி, சரவணன், ராஜேஷ் ஆகியோர் என்று தெரியவந்தது.