ராமர் கோவில் : விவாதத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ்

டில்லி

யோத்தி ராமர் கோவில் குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சியான ஆஜ்தக் வெளியிட்ட விவாத அறிவிப்பு நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த 1992 ஆம் ஆண்டு இந்து கரசேவகர்கள் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட 16 ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தார்கள்    அதன் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்குச் சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் சன்னி வக்ஃபு வாரியம் இடிக்கப்பட்ட மசூதியை புதுப்பித்து விடலாம் என்றும் நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா அமைப்பினர் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறி வந்தார்கள்.   வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல்  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ் தக் தொலைக்காட்சி புதன்கிழமை இரவு ஒரு விவாதம் நடத்தியது . விவாதத்தின் தலைப்பான “நம்முடைய ராமர் பிறந்த இடமும் ராமரும் நம்முடையது என்றால் இந்த மசூதிக்கு போகும் (முஸ்லிம்கள்) எங்கிருந்து வந்தார்கள்” என்பது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

சங்கப்பரிவாரங்கள் இந்த தலைப்புக்கு மகிழ்ந்தாலும் ஊடகவியலர்  பலர் தங்களது எதிர்ப்பையும் பதிவிட்டனர்

மூத்த பத்திரிகையாளர் பிரதீக் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில் ”இந்தியாவை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் வகித்த பங்கைப் பற்றி ஒரு நாள் நிச்சயம் யாராவது பேசுவார்கள். மக்களும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். இதை ஒருபோதும் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என அப்போது சபதம் எடுப்பார்கள்” என பதிவிட்டார்

யோகேந்திர யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் ”மதச்சார்பற்ற நம்பிக்கையும் தாராளவாத கண்ணோட்டமும் கொண்ட ஒரு கண்ணியமான மனிதர் அருண் பூரியால் நடத்தப்பட்டு வரும் தொலைக்காட்சியில் இப்படி ஒரு விவாதமா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது தீமையின் சக்தி அல்ல என்றாலும் நன்மையின் பலவீனம் ஆகும்ம்.  இது மனிதகுலத்தை அழிக்கிறது” என்று எதிர்ப்பை பதிவிட்டிருந்தார்.

ஆகாஷ் பானர்ஜி, ”இவ்வாறு செய்தி ஊடகங்களில் பார்த்த மிகக் கேவலமான ஒன்றை நீங்கள் பகிருங்கள். ஒரு நாள் நம்மை நாம் இப்படிக் கேட்டுக்கொள்வோம்… ‘எப்படி நம்மை ஒருவர் இப்படிப் பிரிக்க முடியும்’ என்று. அதற்கு முன், ஊடக வெறுப்பின் விதைகளை நாம் பாதுகாப்பது முக்கியம். அப்போதுதான் எதிர்கால சந்ததி அதிலிருந்து கற்க முடியும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த தலைப்புக்கு மன்னிப்புக் கோரி இது குறித்த விவரங்களை ஆஜ்தக் டிவிட்டரில் இருந்து நீக்க வேண்டும்  என ஆர்வலர் சாகேத் கோகலே  ஆஜ்தக் ஊடகத்தை கேடுக்கொனார்.  அப்படி இல்லை எனில் சட்டப்படி வழக்கு தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.   ஆனால் ஆஜ்தக் மன்னிப்பும் கேட்காமல் செய்தியையும் நீக்காமல் உள்ளதால் சாகேத் கோகலே ஊடகத்துக்கு  சட்டபூர்வ நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

அதற்கும் ஆஜ்தக் ஊடகம் இன்னும் பதில் அளிக்காமல் உள்ளது.