ரோஹிங்கியாக்கள் சட்ட விரோத குடியேறிகள் – மத்திய அரசு

ரோஹிங்கியா முஸ்லீம்கள் சட்ட விரோத குடியேறிகள் என்று கூறிய மத்திய அரசு, அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மியான்ம்ரில் இருந்து குடியேறிய ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி வருவதாக அவ்வபோது குற்றச்சாட்டு எழுந்தன. இதனால் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் யார் என்பதில் மாநில அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். வங்கதேசத்தை சேர்ந்த அகதிகளை கண்டறியும் பொருட்டு அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்து வெளியிட்டது. அதன்படி பார்க்கையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே மாநில அரசின் பட்டியலில் உள்ளது. எஞ்சிய 40 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

rohingya

இதனால் அம்மாநிலத்தில் பெரும் குழப்பம் நீடித்ததுடன், விவாதங்களுக்கும் வழிவகுத்தது. வங்கதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திட்டமிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேசிய குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டதற்கு பல கட்சியினர் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து தனியாக இனம் காணப்பட்ட 40 லட்சம் பேர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அரசிற்கு உத்தரவிட்டது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த விவகாரம் வெடிக்க தொடங்கியது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ மியான்மரில் இருந்து இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா மக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோத குடியேறிகள். அவர்களை அகதிகளாக இந்தியா கருதவில்லை” என்று கூறினார்.

மேலும் இந்தியாவில் உள்ள ரோஹிங்கியாக்களின் தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கைரேகைகளை சேகரிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுபோலவே மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ” இந்தியாவில் தற்போது 40 ஆயிரம் ரோஹிங்யாக்கள் இருப்பதாக தற்போதைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. அதிகளவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ரோஹிங்யாக்கள் குடியேறியுள்ளனர். ஹைதராபாத், ஹரியானா மாநிலத்தில் உள்ள மீவாட் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் ரோஹிங்கியா மக்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சுகதா போஸ் மத்திய அரசு ரோஹிங்யா அகதிகளை மோசமாக நடத்துவதாக கூறினார். அப்போது இடையில் குறுக்கிட்ட கிரண் ரிஜிஜூ, ”அகதிகள் விஷயத்தில் நீண்டகாலமாகவே இந்தியா மனிதநேயத்துடன், மென்மையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது’’ என்றார்.

எனினும், அசாம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்குமாறு எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஹிங்யாக்கள் குறித்த புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைத்த பின் வெளியுறவு அமைச்சகம் மூலம் மியான்மர் அரசை தொடர்பு கொண்டு பேச உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.