ரோஹிங்கியா விவகாரம்: 2 பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை..! 

நய்பிடா:

மியான்மரில் பிரபல பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர்கள் 2 பேருக்கு தேசிய பாதுகாப்பு  சட்டத்தில் 7 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மியான்மரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினை காரணமாக அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள், நாட்டில் இருந்து வெளி யேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவிலும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சுமார் 40ஆயிரம் பேர் தஞ்சமடைந்து உள்ளனர்.

இது மியான்மர் நாட்டின்  இனஅழிப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது. சுமார் 700,000 ரோஹிங்கியா  அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  இந்த பிரச்சினை பூதாகாரமாக எழுந்தது.

அது குறித்து செய்தி சேகரித்த பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் ஊடகத்தை சேர்ந்த 2 பத்திரிகையாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  கைது செய்யப்பட்டனர். மியான்மர் நாட்டின் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த மியான்மர் நாட்டின்  நீதிபதி, ‘2 பத்திரிகையாளர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக குற்றம் செய்துள்ளனர். ஆகவே, அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு, ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்று நாடு முழுவதும் கட்டணக்குரல்களை எழும்பி உள்ளது.