லாட்டரி டிக்கெட் வாங்குவதற்காக ரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் மெமாரி என்ற பகுதியில் உள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியின் மூத்த உதவி மேலாளராக உள்ள தாரக் ஜெய்ஸ்வால் (35) ரூ. 84 லட்சத்தை சில்லறையாக திருடி அதன் மூலம் லாட்டரி சீட்டுகளாக வாங்கி குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஆடிட்டிங் சோதனை நடந்தது. அப்போது சில்லறை காசுகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரில் அவற்றின் எண்ணிக்கை குறைந்திருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

அந்த சமயத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாரக் ஜெய்ஸ்வால் வங்கிக்கு வராமல் விடுப்பில் இருந்துள்ளார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் தாரக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் பணியாற்றிய 17 மாதங்களில் ரூ. 84 லட்சத்துக்கான சில்லறையை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ரூபாய் நோட்டுகளை திருடாமல் சில்லறைகளாகவே திருடியுள்ளார்.

இவர் அனைத்து நாணயங்களும் 10 ரூபாய் நாணயங்களாக திருடியிருந்தால், அவர் 17 மாத காலத்திற்குள் 840,000 நாணயங்களை அல்லது ஒவ்வொரு மாதத்திற்கும் 50,000 நாணயங்களை அல்லது ஒவ்வொரு நாளும் 2,000 நாணயங்களை (25 வேலை நாட்களை எடுத்துக் கொள்ளுதல்) திருடியிருக்கலாம் என அறியப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையின் போது அவர் கூறியதாவது, ‘லாட்டரி சீட்டுகள் வாங்குவதற்காகவே சில்லறைகளை திருடினேன். எப்போது வேண்டுமானாலும் ஆடிட்டிங் வந்தால் மாட்டிக் கொள்வேன் என்பது தெரியும்,’ என்றார்.

எனினும், தன்னால் லாட்டரி அனுமதிச் சீட்டு வாங்கும் பழக்கத்தை விடமுடியவில்லை என்றார். சில்லறைகளை வங்கி மேலாளர் திருடும் அளவுக்கான சில்லறைகளை மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)க்கு அனுப்பாமல் வைத்திருந்தது ஏன் என வங்கி அதிகாரிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.