வரும் 2030-ல் இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும்: உலகப் பொருளாதார அமைப்பு ஆய்வறிக்கை

புதுடெல்லி:

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகப் பொருளாதார அமைப்பு மற்றும் பெயின் அண்ட் கம்பெனி வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் நுகர்வோர் பொருட்கள் விற்பனைக்கான நல்ல நேரமாக உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் படிப்படியாக உயர்ந்து கொண்டே போவதுதான் இதற்குக் காரணம்.

தற்போது இந்திய நுகர்வோரின் வாங்கும் சக்தி 1.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இது எதிர்வரும் 2030-ல் 6 டிரில்லியன் டாலராக உயரும். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா மாறும்.

வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையில், அடுத்த 2030-ம் ஆண்டுக்குள் உயர் நடுத்தர பிரிவினரின் வாங்கும் சக்தி 4 மடங்காக உயரும். உயர் வருவாய் பிரிவினரின் வாங்கும் சக்தி இரு மடங்காக உயரும்.

உள்நாட்டு தனிநபர் நுகர்வு இந்தியாவில் 60 சதவீதமாக உள்ளது. சீனாவில் 40 சதவீதமாக உள்ளது. குறைந்த மற்றும் அதிக அளவிலான முதலீட்டை இந்திய பொருளாதாரம் பாதுகாப்பதையே இது காட்டுகிறது.

2030-ம் ஆண்டுக்குள் இரண்டரை கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிடுவார்கள். 5 சதவீதத்துக்கு குறைவானவர்களே வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பார்கள்.

அதேசமயம், 14 கோடி இந்திய நடுத்தர குடும்பங்களும், 20 லட்சம் உயர் வருவாய் குடுபங்களும் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள்.
உயர் நடுத்தர வருவாய் குடும்பத்தினரின் வாங்கும் சக்தி 47 சதவீதமாகவும்,உயர் வருவாய் குடும்பத்தினரின் வாங்கும் சக்தி 7 சதவீதமும் அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.