வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி : ஜி ஜின்பிங் அறிவிப்பு

பீஜிங்

றுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி அடைந்துள்ளதாக இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வறுமை ஒழிப்புப் பணிகள் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடந்து வருகிறது.  இதையொட்டி ஐநா சபை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து நாடுகளிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் யாரும் இருக்கக் கூடாது என பணிகளைச் செய்யத் திட்டங்கள் தீட்டி உள்ளது.

இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் பதவி ஏற்ற 2012 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி சுமார் 79 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 256.8 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசித்து வந்தனர்.   அதன் பிறகு நான் எடுத்த நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடி பேர் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து மீட்டு வர முயற்சிக்கப்பட்டது.

இந்த ஏழை மக்களில் 28 பழங்குடியின குழுக்கள் சிறு சிறு கும்பலாக நாட்டில் பல பகுதிகளில் வசித்து வந்தனர்.  எனவே கிராமப்புற பகுதிகளில் வசிப்போருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அதிக அளவில் அமல்படுத்தப்பட்டன.  சீனாவில் சுமார் 10 கோடி பேர் மிகவும் ஒதுக்குப்புற பகுதிகளில் வசித்து வருகின்றனர்.   தற்போது அனைவரது வாழ்க்கை வளங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே சீனாவில் வறுமை என்பது முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.  அதாவது வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி அடைந்துள்ளது.  ஐநா இதற்கு 2030 வரை கெடு விதித்திருந்தது.  ஆனால் சீனா அதற்கு முன்பே வறுமையை முழுமையாக ஒழித்துள்ளது.   ஆனால் இது எங்கள் நடவடிக்கைகளின் முடிவு அல்ல.  இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் முன்னேற்றுவதே எங்களின் அடுத்த இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.