Random image

வாக்களித்த மக்களுக்கு பாஜக செய்த தண்டனையா பெட்ரோல் – டீசல் விலையேற்றம்

petrol-bunk

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.19 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 61.32 ரூபாயாகவும், டீசல் விலை 50.09 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அடித்தட்டு மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாகக் கூறி கடந்த மார்ச் 17 ஆம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.06 ரூபாயும், டீசல் விலை 1.96 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான 35 நாட்களில் பெட்ரோல் விலை இரு தவணைகளில் 5.25 ரூபாயும், டீசல் விலை 3 தவணைகளில் 4.47 ரூபாயும் உயர்த்தப் பட்டிருக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது கிடையாது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 1, 16 ஆகிய தேதிகளில் தான் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், இம்முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருந்து, விலையை உயர்த்தியதிலிருந்தே மையஅரசின் நேர்மையின்மை அம்பலமாகி விட்டது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். கச்சா எண்ணெய் விலைகுறைவின் பயன்களை மக்களுக்கு தராமல் அரசே அனுபவிப்பது முறையா? என வினா எழுப்பப்பட்ட போது மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. எனினும் நிலைமையை சமாளிக்கும் வகையில்,‘‘ எரிபொருள் விலை மிகக் குறைவாக இருந்ததால் தான் வரிகளை உயர்த்தினோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்துகிறோம். எரிபொருள் விலைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரும் போது அதை சமாளிக்க கலால் வரிகளை அரசு குறைக்கும்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். அந்த வாக்கை காப்பாற்ற நினைத்திருந்தால் இப்போது கலால் வரியை கணிசமாக குறைத்து விட்டு இந்த விலையேற்றத்தை தவிர்த்து இருக்கலாம்.

அடுத்தடுத்து 3 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதாலும், தமிழகத்தில் சாலை பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் சரக்குந்து வாடகையை உயர்த்தப்போவதாக அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்போது மீண்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது சரக்குந்து கட்டணம் மேலும் உயர்த்தப்படுவதற்கு தான் வழிவகுக்கும். இதன் விளைவாக பாலில் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். யாருக்கோ பயன்படும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக எரிபொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது என்ன வகையான ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

முந்தைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட போது அதை எதிர்த்து பாரதிய ஜனதா போர்க்கோலம் பூண்டது. எரிபொருள் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்ணீர் வடித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறையும் என பிரதமர் வேட்பாளர் முதல் மக்களவை உறுப்பினர் வேட்பாளர் வரை அனைவரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு, முந்தைய அரசு செய்த தவறுகளை மட்டுமின்றி, செய்யாத தவறுகளான கலால்வரி உயர்வையும் சேர்த்து செய்கிறது பாஜக. இவற்றையெல்லாம் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த தண்டனையாகவே பார்க்கத் தோன்றுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணர்ந்து அவற்றை நடுவணரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் அனுபவித்து வரும் வலியை பாரதிய ஜனதாவும் அனுபவிக்கும் நிலையை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஏற்படுத்துவார்கள்’’என்று கூறியுள்ளார்.