jaya04_2622596f

ழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக வந்து சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தனது  ஆர்.கே. நகர் தொகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார் ஜெயலலிதா. ஆனாலும் மக்கள் அதிருப்தி தொடர்கிறது.

கடந்த பல நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும்  வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் அறவே இல்லை.

இந்த நிலையில் மாநில அரசு, வெள்ள நிவாரணத்தில் தகுந்த அக்கறை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது.

சிதம்பரம் அருமே தங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள், அவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிலவற்றுக்கு அமைச்சர்கள் சென்றார்கள்.  அவர்கள் உணவுப்பொட்டலம் போன்ற சிறு நிவாரண உதவி செய்துவிட்டு, புன்னகையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.  வெள்ளம் பாதித்த பகுதிகளை செப்பனிடுவதில் அக்கறை செலுத்தவில்லை. அதிகாரிகளும் அமைச்சருடன் சென்று திரும்பிவிடுகிறார்கள்.

“இந்த அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறையே செலுத்தவில்லை. ஆர்.கே. நகரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது 30 அமைச்சர்கள் அங்கே தங்கி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால்  பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்துக்கு வெறும் ஆறு அமைச்சர்களே வந்து பார்வையிட்டனர்” என்று குமுறுகிறார்கள் மக்கள்.

அதிலும் அமைச்சர்கள், மழை நிவாரணம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தும் போது செயல்படும் விதமும் மக்களை எரிச்சலூட்டியிருக்கிறது.

முதல் வேலையாக  கூட்டம் நடைபெறும் இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ ஒன்றை எடுத்து வைக்கிறார்கள். அதே போல அரசி மூட்டை வழங்கப்படும் பையிலும் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் கவரிலும் ஜெயலலிதாவின் படங்கள்  இருக்கிறதா என்பதை அக்கறையுடன் கவனிக்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்தித் துறை  அளிக்கும் செய்திக் குறிப்பிலும் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி” என்ற வார்த்தைகளை மறக்காமல் சேர்க்கிறார்கள்.

ஆனால் மழைக்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  எடுக்கவில்லை… மழை வெள்ளத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளிலும் அக்கறை செலுத்தவில்லை.

அ.தி.மு.க.வை சேர்ந்த நடிகை சரஸ்வதி இது குறித்து ஒரு தொ.கா. விவாதத்தில் பேசும்போது,  “வருண பகவான் என்ன போன் போட்டுட்டா வர்றாரு” என்று அலட்சியமாக கேட்டார்.

ஆனால் வருணபகவான் தகவல் சொல்கிறாரோ இல்லையோ.. வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து  கதறிக்கொண்டேதான் இருந்தது. இந்த முறை மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால் ஆளும் மற்றும் அதிகாரிகள் தரப்பு அதை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

தவிர, முதல்வர் ஜெயலலிதாவும் மழை வெள்ள பாதிப்பை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.

29 நாட்கள்  இடைவெளிக்குப் பிறகு  கடந்த 11ம் தேதிதான் தலைமைச் செயலகம் வந்தார் அவர். வந்த வேகத்தில் மழைநிவாரணம் குறித்து  ஒரு மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு கிளம்பிவிட்டார்.

ஆனால் அந்த ஆலோசனையின் பயனாக எந்தவொரு நிவாரணமும் நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி எண்களை வழங்கியிருக்க வேண்டும். அதுதான் முறை. நடைமுறையும் கூட.

ஆனால் மழைவெள்ளத்தால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட பிறகே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.   ஏரி, குளங்களை உருப்படியாக தூர்வாரியிருந்தாலே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.  ஆனால் அப்படி தூர்வார நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கும் நிலைதான் இந்த ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு  திருவைகுண்டம் அணையை தூர்வார ம.தி.மு.க வழக்கறிஞர் ஜோயல் வழக்கு தொடுத்ததும், அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வாதாடியதும் ஒரு உதாரணம்.

குறிப்பாக, சென்னை படும்பாடு சொல்லி மாளாது. உலக அளவில் கவனம் பெற்ற மாநகரம் சென்னை. தாழ்வான பகுதிகள் எல்லாம் மூழ்கி, சாலையில் படகு போக்குவரத்து நடக்கும் நிலை. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.. ஆனால் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை.

கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே இதை சிங்கார சென்னை ஆக்கிவிட்டதாக அறிவித்தார் மேம்பால நாயகர் மு.க. ஸ்டாலின். ஆனால் மாநில ஆட்சியையும், சென்னை மாநகராட்சியையும் கையில் வைத்திருந்த தி.மு.க.வின் நிர்வாக லட்சணம் இப்போதும் பல்லிளிக்கிறது.

இதில் பூட்ஸ் காலோடு வெள்ள மக்களை சந்தித்து “இந்த ஆட்சி மோசம்” என்கிறார்.

“இந்த ஆட்சி மோசம்தான்.. போன ஆட்சி போலவே!” என்கிறார்கள் மக்கள்.

தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, மக்களை நேரடியாக சந்திக்கவே இல்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்த பிறகு, நேற்று கிளம்பி தனது ஆர்.கே.  நகர் தொகுதிக்கு வந்தார்.

வந்தவர் தனது காரில் அமர்ந்து புன்னகைத்தபடி மக்களை கடந்து சென்றார்.

இடையில் பேசியவர்,  தேர்தல் பிரசார பாணியில், “மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாளில் பெய்துவிட்டது” என்று வருணபகவான் மீது பழியை போட்டார்.

அவரது கட்சியைச் சேர்ந்த நடிகை சரஸ்வதி, “வருணபகவனா போன் செய்யவில்லை” என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்!

ஜெயலலிதா பேசும்போது இன்னொன்றையும் சொன்னார்: “வெள்ள நிவாரணத்தில் சுணக்கம் இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மக்கள் இதை ஏற்கமாட்டார்கள்” என்றார். அதோடு, பேச்சுக்கு பேச்சு “வாக்காள பெருமக்களே” என்று விளித்தார்.

ஆக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எந்த அளவில் நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய அவர் வரவில்லை.

விரைவில் வரவிருக்கும் தேர்தலில் ஓட்டுப்போடப்போகும் எந்தரமாகவேதான் அவர் மக்களை நினைக்கிறார்.

என்ன செய்ய…  கீ கொடுத்தால் வாயைத் திறக்கும் பொம்மையைப்போல, காசு கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள் மக்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அப்படித்தான் பேசுவார்.

ஆம்.. மக்களை வாக்களிக்கும் எந்திரங்களாகவே அவர் கணித்திருக்கிறார். ஆனால் மக்கள் இப்போது கொதித்துப்போய் கிடக்கிறார்கள்.

இதே கொதிப்பு தேர்தல்வரை நீடித்தால், அது ஜெயலலிதாவையும் ஆளும் கட்சியையும் நிச்சயம் பாதிக்கும்.