வாட்ஸ்அப் புதிய கொள்கை எதிரொலி : டெலிகிராமில் புதிதாக இணைந்த 2.5 கோடி பேர்

டில்லி

வாட்ஸ்அப் புதிய கொள்கை காரணமாக டெலிகிராம் செயலியில் புதியதாக 2.5 கோடி புதிய பயனாளிகள் இணைந்துள்ளனர்.

முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பயனாளர்கள் உள்ளனர்.  பலரும் அலுவலக ரீதியாக மற்றும் தனிப்பட்ட செய்திகளை அனுப்ப வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.   ஆனால் வாட்ஸ்அப் செயலி தகவல்கள் கொள்கையை மாற்றி உள்ளது. 

புதிய கொள்கைப்படி வாட்ஸ்அப் செயலியில் பதியப்படும் செய்திகள் முகநூலில் சேமிக்கப்பட்டு அவற்றை யாரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதையொட்டி பலரும் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படலாம் எனப் பயம் கொண்டுள்ளனர். 

வாட்ஸ்அப் செயலி நிர்வாகம் தற்போது இந்த விவரங்கள் எதுவும் யாருடனும் பகிரப்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.  ஆயினும் வாட்ஸ்அப் நிர்வாகம் அளித்துள்ள இந்த விளக்கம்  பல பயனாளிகளுக்குத் திருப்தியை அளிக்கவில்லை.  எனவே பலரும் வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.

அவ்வகையில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வேறு செயலிகளுக்குப் பயனாளிகள் மாறி வருகின்றனர்.  டெலிகிராம் செயலியில் தற்போது புதிய பயனர்கள் இணைந்து வருகின்றனர்.  கடந்த 72 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் புதிதாக இணைந்துள்ளனர்.  இதுவரை இந்த செயலியில் 50 கோடி பயனர்கள் இணைந்துள்ளதாக அந்த செயலி தலைமை நிர்வாக அலுவலர் பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.