வாயைத் திறந்தாலே பொய் தானா?: பிரதமர் மோடி மீது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தாக்கு

 சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் கடந்த வியாழக்கிழமை நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அப்பட்டமாக அடுக்கடுக்காக பொய் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் அமரீந்தர் சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமரீந்தர் சிங்

1965 ல் நான் பாகிஸ்தானுடன் போரிட்டவன். கேப்டன் வழியில் குறுக்கிட வேண்டாம். குறுக்கிட்டால் துன்பத்தைத்தான் சந்திக்க நேரிடும். நான் அமைதியானவனாக இருந்தாலும், தன் எல்லைக்குள் வருவோரைப் பார்த்து கர்ஜிக்கும் சிங்கம் நான் என்றார். வஞ்சகத்திலும் தவறான தகவல் தருவதிலும் பிரதமர் மோடி மாஸ்டர்தான். அவரது பொய்களுக்கு எல்லாம் பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு பிரச்சினையிலு பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்து விடுகிறார். 1984&ல் நடந்த கலவரத்தையும், விவசாயக் கடனை ரத்து செய்யவில்லை என்று கூறுகிறார்.குருதாஸ்பூரில் நடந்த கூட்டத்தில் மோடி பேசிய பேச்சு அனைத்துமே பொய். மோடி தரம் தாழ்ந்து பேசி மக்களை திசைத் திருப்பப் பார்க்கிறார். பொய் பேசி காங்கிரஸுக்கு உள்ள நற்பெயரை களங்கப்படுத்தப் பார்க்கிறார். இந்த பொய்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார். சீக்கியர்களுக்கும், சீக்கிய மதத்துக்கும், தானே பாதுகாவலர் என்று கூறும் மோடி, குருநானக்கின் 550  வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என்று முதல்வர் கேப்டர் அமரீந்தர் சிங் குற்றஞ்சாட்டினார்.

2 நாட்களுக்கு முன்பு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள். பாஜகவையும் சிரோண்மனி அகாலிதளத்தையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டார்கள்.

விவாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று மோடி பொய் பேசுகிறார். 4 லட்சத்து 14 ஆயிரத்து 285 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. 1984 கலவரத்தை ஒரு குடும்பத்துக்காக நடந்த கலவரம் என்று கூறும் மோடி, சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மீது திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளதை பற்றி ஏன் பேசவில்லை. கடந்த 1992 ல் குஜராத்தில் நடந்த கலவரம் உங்கள் கண் முன்னே நடந்ததுதானே. அது தொடர்பாக உங்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீங்கள் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் நடந்த கலவரத்தைப் பேசினால், அமைதியாக இருப்பது சரியா? என்று அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.