வீடு வீடாக பால் விற்பனை செய்யும் திரிச்சூர் மேயர்

திரிச்சூர்:

கடந்த புதன்கிழமை கேரள மாநிலம், திரிச்சூர் மாநகராட்சி மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (CPI) சேர்ந்த அஜிதா விஜயன் பொறுப்பேற்றார்.

இவர் கடந்த 18 வருடங்களாக தினமும் காலையில் 200 வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். மேயர் ஆன பின்னரும் இவர் பால் விநியோக தொழிலை தொடர்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இவர் பதவி ஏற்பதற்கு அரசு வழங்கிய சொகுசு வாகனத்தில் வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இவரோ தனது சொந்த இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். இவரை மக்கள் “பால்கார மேயரம்மா” என்றே அழைக்கின்றனர். இவர் மேயராக பதவியேற்பது இரண்டாவது முறை.

மாத்ருபூமி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். 4.30 மணிக்கு பால் விநியோகம் செய்யப் புறப்பட்டுச் செல்வேன். 7.30 மணிக்கு வீடு திரும்புவேன். அதன் பிறகு, வீட்டு வேலைகளை முடிப்பேன். பின்னர் மக்களைச் சந்திப்பேன். கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பேன். பால் விநியோகிக்கச் செல்லும்போதே குடிநீர் வரவில்லை, இரவில் தெருவிளக்கு எரியவில்லை போன்ற பிரச்னைகளை மக்கள் சொல்லிவிடுவார்கள். கூடவே அரட்டையும் அடிப்பார்கள். தினமும் காலை இந்த உரையாடல்கள் தான் என் எனர்ஜி பூஸ்டர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.