வெங்காய விலை வீழ்ச்சி: விரக்தியில் முதல்வருக்கு பணம் அனுப்பிய விவசாயி

மும்பை:

காராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில், ஆண்டர்சுல் கிராமத்தை சேர்ந்த சந்திரகாந்த் பிகான் தேஷ்முக் என்பவர் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ்க்கு 216 ரூபாய் அனுப்பியுள்ளார்.

டிசம்பர் 5-ம் தேதி வேளாண் விளைபொருள் சந்தை குழுவால் (APMC) நடத்தப்பட்ட ஏலத்தில் சந்திரகாந்த் என்ற விவசாயி 545 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தார். விற்பனை முடிந்து, APMC கட்டணத்தை கழித்த பிறகு, கிலோவுக்கு 51 பைசா என்ற கணக்கில் அவருக்கு 216 ரூபாய் செலுத்தப்பட்டது.

“என் பகுதியில் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சொற்ப பணத்தை வைத்து எப்படி எனது குடும்பத்தை நடத்த முடியும், எப்படி எனது கடன்களை திருப்பி செலுத்த முடியும்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார். தனது வெங்காயம் நன்றாக விளைந்த நிலையிலும் அதற்கு நல்ல விலை கிடைக்க வில்லை என்ற விரக்தியில் அந்த பணத்தை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

இதேபோல் கடந்த வாரம், சஞ்சய் சாதே என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு விலை போனதால், அதில் கிடைத்த 1,064 ரூபாயை பிரமதர் மோடிக்கு அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வெங்காயத்தின் விலை படுமோசமாக சரிந்துவிட்டதை நினைத்து நாசிக் மாவட்டத்தில் இரு விவசாயிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும், அகமதுநகர் மாவட்டம், நவேசா தாலுகாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, 20 குவிண்டால் வெங்காயத்தை இலவசமாகத் தருவதாக பதாகையில் மராத்தி மொழியில் எழுதி அறிவித்துள்ளார். மேலும், வெங்காயம் விலை குறைவுக்கு காரணமான மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி என்றும் அந்த விவசாயி பதாகையில் தெரிவித்துள்ளார்.