வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: விரைவில் சட்டத் திருத்தும்

டில்லி:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சல் அல்லது மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வாக்களிப்பது, அவர்கள் சார்பில் அங்கீகாரம் பெற்ற ஒருவர் வாக்களிப்பது என்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் குழுவினர் சட்ட முன் வரைவை மத்திய சட்ட அமைச்சத்துக்கு அனுப்பி இருந்தது.

எனினும் இந்த விவகாரம் குறித்து கடந்த ஜனவரியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் வி.பி.ஷம்ஷீர் மற்றும் லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் நாகேந்தர் சிந்தம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், பொதுத் தேர்தலின்போது, என்ஆர்ஐ-கள் இந்திய தூதரகம் மூலமோ, அஞ்சல் அல்லது இணையதளம் வழியாகவோ தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த ஜூலை மாதம், இந்த மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் உரிய திருத்தும் மேற்கொள்ளாமல், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க முடியாது. இது தொடர்பான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்,” என்றார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சர்வதேச அளவில் 114 நாடுகளிலும், ஆசியாவில் 20 நாடுகளிலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் நாட்டு தேர்தலில் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

டிசம்பர் 11-ம் தேதி தொடங்க உள்ள குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் முடிவெடுக்கப்படலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எ.என்.எஸ் நட்கர்னி கூறினார்.

எனினும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.