வேளச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமி பெசன்ட் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

gg

வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமி பெசன்ட் நகர் பகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை:

வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி. முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பெசன்ட்நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். பெசன்ட்நகர் பஸ்நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டுவிட்டு தனது வாக்கு சேகரிப்பைத் தொடங்கி அவர், அங்கிருந்த கடைக்காரர்களிடமும், குடியிருப்புவாசிகளிடமும் இரட்டை இலை சின்னத்தைக் காட்டி கைகூப்பி வணங்கி வாக்கு கேட்டார்.

தென்சென்னை அ.தி.மு.க. எம்.பி. ஜெயவர்த்தன், அசோக் எம்.எல்.ஏ, வேளச்சேரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் மற்றும் அ.தி.மு.க.வினர் சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடற்கரையோரம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தோரைச் சந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்கக் கேட்டனர். ஜெ.ஜெயவர்த்தன் எம்.பி. அங்கிருந்தவர்களிடம் வேட்பாளர் எம்.சி.முனுசாமியை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார்.

பெசன்ட்நகர் மீன் கடைப் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது, தங்களுக்கு நல்லமுறையில் மீன்கடைகள் அமைத்துத்தரவும், கழிவுநீர் வெளியேற வசதி செய்துதரவும் கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக எம்.பி. ஜெயவர்த்தன் குறிப்பிட்டார். செருப்பு தைக்கும் தொழிலாளி, ஜூஸ் வியாபாரி, காய்கறி கடைக்காரர், பஸ்நிலையக் கடைக்காரர்களிடம் சென்றும் வேட்பாளர் எம்.சி.முனுசாமி உள்ளிட்டவர்கள் வாக்கு சேகரித்தனர்.