வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! பி.ஆர்.பாண்டியன் 

சென்னை: மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தி உள்ள  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர்  பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியஅரசின் வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்,  “டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். ஆனால், போராட்டம் குறித்தோ, அவர்களது கோரிக்கை குறித்தோ வெளிப்படையாக ஊடகத்திலோ விவசாயிகளிடத்திலோ இதுவரை பேசாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பிரதமர் மோடிதான் பொறுப்பு. அவர், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இது மனிதநேயமற்ற செயல். ஆனால், விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா பிரதமர் தார்மீக ஆதரவு கொடுத்திருக்கிறார்.  இது வரவேற்கப்படவேண்டியது.

புதிய வேளாண் சட்டங்களால் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயமும், இயற்கை வளங்களும் இச்சட்டங்களால் கடுமையாக பாதிக்கப்படும். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.