2019 தேர்தல் ஜுரம்: 6 மாதத்துக்குள் மோடி தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்கள் தயார்

டில்லி:

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்குள்ளான அவகாசம் மட்டுமே உள்ளது. தேர்தலை சந்திக்க மோடி அரசு தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாநில வாரியாக புதிதாக அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டப் பணிகள், தொடக்க விழா நடத்த வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகம் தயாரித்து வருகிறது. அடுத்த 6 மாதத்தில் அதாவது டிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்க விழாக்களை நடத்தி முடிக்க மோடி அரசு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு அமைச்சகமும் இந்த திட்டப் பணிகள் குறித்த முழு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டம் தொடங்குவதற்கு அனைத்து துறைகளின் அனுமதி பெறப்பட்ட திட்டங்களின் பட்டியலை மட்டுமே அளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடக்க விழாக்கள் நடத்தும் திட்டம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மக்கள் மத்தியில் பாஜக அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்பாட்டை முன்னெடுத்து செல்ல பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விளம்பரப்படுத்த முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.