கட்சியில் சேர்த்து பழைய பாவங்களை கரைத்த பாரதீய ஜனதா..!

தமது தேர்தல் வெற்றிக்காக, கட்சியின் முன்னாள் கடும் அரசியல் எதிரிகளை எல்லாம், கட்சியில் சேர்த்து வருகின்றனர் பாரதீய ஜனதா தலைவர்கள்.

இப்பணியில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர் என்றால் மிகையாகாது.

மராட்டிய மாநில அரசியல் பெருந்தலையான நாராயண் ரானேவுக்கும், பாரதீய ஜனதாவுக்கு ஒரு காலத்தில் எட்டாம் பொருத்தம்! ரானே மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணை நடைபெற வேண்டுமென வலியுறுத்தியவர்கள் அக்கட்சியினர்.

ஆனால், காங்கிரஸில் அமைச்சர் பதவிகளை அனுபவித்து விட்டு, ஆட்சி போனதும், அங்கிருந்து விலகி, மகாராஷ்டிரா ஸ்வபிமான் பக்ஷ் என்ற அமைப்பை நடத்திவந்த ரானேவை, கடந்த 2017ம் ஆண்டு, ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்து, தம் பக்கம் இழுத்தனர்.

அதுபோல்தான், சமாஜ்வாதி கட்சியில் முக்கிய நபராக விளங்கி, பாரதீய ஜனதாவினருடன் கடுமையான வார்த்தைப் போர்களில் ஈடுபட்ட நரேஷ் அகர்வாலையும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அதாவது, முன்னாள் எதிரிகளின் பாவங்களெல்லாம், கட்சியில் இணைந்தவுடன் கழுவி துடைத்தெறியப்பட்டு விட்டது என்பதுதான் அர்த்தம்.

இப்பட்டியலில், அஸ்ஸாம் மாநிலத்தின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேற்குவங்கத்தின் முகுல் ராய், உத்தரகாண்டின் விஜய் பகுகுனா, என்.டி.திவாரி, உத்திரப் பிரதேசத்தின் சுவாமி பிரசாத் மெளரியா என்று ஒரு பட்டியலே அடங்கும்.

தேர்தல் வெற்றிக்காக, பல மாநிலங்களில், இவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பல பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் கட்சிகளுடன், பாரதீய ஜனதாவினர் கூட்டணி வைத்துக் கொண்டவர்களே!

– மதுரை மாயாண்டி