உலக செஸ் போட்டித்தொடருக்கு ஆனந்த் தலைமையில் இந்திய அணி தயார்

மும்பை: எதிர்வரும் அக்டோபர் 10 முதல் 21 வரையில், பிரிட்டனில் நடக்கவுள்ள உலகளாவிய செஸ் போட்டியான கிராண்ட் ஸ்விஸ் போட்டித் தொடரில் கலந்துகொள்ள விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான இந்திய அணி தயாராக உள்ளது.

உலக செஸ் வரலாற்றில், இதுவொரு வலிமையான ஸ்விஸ் – சிஸ்டம் போட்டித் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா சார்பில், ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதிஷ் சந்தோஷ் குஜராத்தி, ஆதிபன், சசிகிரண் மற்றும் சேதுராமன் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இந்தப் போட்டித் தொடரில் உலகளாவிய செஸ் பிரபலங்களும் கலந்துகொள்கின்றனர். உலகின் முதல்நிலை வீரரான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்ஸன், ஃபேபியானோ கேருவனா, வெஸ்லே சோ, அலெக்ஸாண்டர் கிரிஷுக், அனிஷ் கிரி, ஹிகாரு நகாமுரா மற்றும் செர்கே கர்ஜாகின் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டித் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை $ 4,32,500. சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் எடுத்துச் செல்லக்கூடிய தொகை மட்டும் $ 70,000.