புதிய தலைமைச்செயலக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை: தமிழகஅரசின் அரசாணை ரத்து!

சென்னை:

புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,  தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

திமுக ஆட்சியின்போது, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள  ஓமந்தூரார் அரசினர் தோட் டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதன்பின்னர் ஆட்சி மாறியதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, புதிய தலைமை செயலகத்தை மருத்துவ மனையாக மாற்றியும்,  புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து,  ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ரகுபதி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஆணையம் முடங்கி உள்ள நிலையில், சமீபத்தில் அது தொடர்பான வழக்கில் நீதிபதி கூறிய கருத்தால், ஆணைய நீதிபதி ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து ஆணையத்தை கலைத்த தமிழக அரசு, புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல கட்ட விசாரணை  நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், தலைமை செயலக புதிய கட்டிடம் தொடர்பாக நீதிபதி ஆர்.ரகுபதி தன் விசாரணையை முடிக்கவில்லை. ஆதார ஆவணங்களை எல்லாம் திரட்டி, முழுமையாக விசாரணை முடிந்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே, போலீஸ் விசாரணைக்கு மாற்ற முடியும்.

எனவே அரைகுறை ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி கூறி உள்ளார்.